Last Updated : 29 Apr, 2018 08:28 AM

 

Published : 29 Apr 2018 08:28 AM
Last Updated : 29 Apr 2018 08:28 AM

அதிக லாபம் தரும் தொழிலாக மாறியுள்ளதால் தமிழகத்தில் பிரபலமாகும் நாட்டுக் கோழி வளர்ப்பு: 52 லட்சம் கோழிகளுடன் மேம்படும் கிராமப் பொருளாதாரம்

லாபம் தரும் தொழிலாக மாறியுள்ளதால், தமிழகத்தில் நாட்டுக் கோழி வளர்ப்பு பிரபலமாகி வருகிறது. தற்போது 52 லட்சம் கோழிகளுடன் கிராமப் பொருளாதாரம் கணிசமாக மேம்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் வீடுதோறும் நாட்டுக் கோழி வளர்த்தனர். விவசாயத் துணைத் தொழிலாக நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டன. மக்கள் தொகை பெருக்கம் காரணமாக தேவையான அளவுக்கு முட்டையும், இறைச்சியும் வழங்க முடியாமல் போனது. பிராய்லர் கோழியும், முட்டையும் விலை குறைவு என்பதால் அமோகமாக விற்பனையாயின.

இயற்கை விவசாயம் போலவே நாட்டுக் கோழியின் சத்தும், தரமும் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், நாட்டுக் கோழிக்கான மவுசு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் லாபம் தரும் தொழிலாக மாறிவிட்டதால், நாட்டுக் கோழி வளர்ப்பும் பிரபலமாகி வருகிறது. அதனால், விவசாயிகள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் நாட்டுக் கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர்.

நாட்டுக் கோழி வளர்ப்பை ஊக்குவிக்க 2012-13-ம் ஆண்டுமுதல் தமிழக அரசு மானியம் வழங்கி வருகிறது. நாட்டுக் கோழி வளர்க்க விரும்புவோர் உள்ளூரில் உள்ள கால்நடை மருத்துவரிடம் உரிய படிவம் வாங்கி விண்ணப்பிக்க வேண்டும்.

மானியம், ஊக்கத்தொகை

மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெற்ற பிறகு கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் மூலம் ஒவ்வொரு பயனாளிக்கும் 250 நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வாங்குவதற்கு மானியம் (25 சதவீதம்) மற்றும் ஊக்கத் தொகையாக ரூ.45,750 வழங்கப்படுகிறது. நாட்டுக் கோழி இனவிருத்தியாளர்கள், குஞ்சு பொரிப்பு நிறுவனங்களிடம் இருந்து பயனாளிகள் நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வாங்குகின்றனர்.

2012-13-ம் ஆண்டு 693 பயனாளிகள், 2013-14-ம் ஆண்டு 3,923 பயனாளிகள், 2014-15-ம் ஆண்டு 3,077 பயனாளிகள், 2015-16-ம் ஆண்டு 3,806 பயனாளிகள், 2016-17-ம் ஆண்டு 4,185 பயனாளிகள், 2017-18-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி வரை 2,861 பயனாளிகள் என மொத்தம் 18,545 பயனாளிகளுக்கு தலா 250 நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வீதம் மொத்தம் 46 லட்சத்து 36 ஆயிரத்து 250 கோழிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர மத்திய, மாநில அரசின் புழக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தின்கீழ் 100 சதவீத மானியத்தில் ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 20 குஞ்சுகள் வீதம் கிரி ராஜா, வன ராஜா என்ற நாட்டுக் கோழி ரக குஞ்சுகள் வழங்கப்படுகின்றன.

ஒரு பயனாளிக்கு ரூ.2,500

நான்கு வார கோழிக்குஞ்சு ஒன்றின் விலை ரூ.50. இருபது குஞ்சுகளுக்கு 1,000 ரூபாயும், கோழிக் கூண்டுக்கு 1,500 ரூபாயும் ஆக மொத்தம் ஒரு பயனாளிக்கு ரூ.2,500 கிடைக்கிறது. இத்திட்டத்தின்கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 29,000 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 80 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டுக் கோழி பிரியாணி, நாட்டுக் கோழி முட்டையின் தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், நாட்டுக் கோழி வளர்ப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம் 18 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்தாண்டு மேலும் 13 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம் செயல்படுத்த ரூ.50 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் தற்போது 52 லட்சம் நாட்டுக் கோழிகள் உள்ளன. இதன்மூலம் கிராமப் பொருளாதாரம் கணிசமாக மேம்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x