Published : 15 Apr 2018 10:02 AM
Last Updated : 15 Apr 2018 10:02 AM

இந்திய - இலங்கை நட்புறவு; முந்தைய நிலையில் இல்லை- இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கருத்து

“இந்திய- இலங்கை நட்புறவு முந்தைய நிலையில் தற்போது இல்லை. சீனாவுடன் இலங்கை மிகவும் நெருங்கி வருகிறது” என்று இலங்கை வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில், குறும்பலா மூலிகை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நேற்று நடைபெற்ற சித்திரை திருவிழாவில் பங்கேற்ற வந்த க.வி.விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் தற்போதுள்ள மத்திய கூட்டணி அரசு சிக்கலில் உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்குப்பின் மத்திய கூட்டணி அரசில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இலங்கை அதிபரும், பிரதமரும் வரும் 2020-ம் ஆண்டு வரை ஆட்சியை கொண்டு சென்றுவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், ஆட்சி நிலைக்காது என்றே மக்கள் நினைக்கிறார்கள். தற்போதுள்ள இலங்கை அரசு, தமிழர்களுக்கு பாதகமாக செயல்படுவதை தடுக்கும் முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.

பறிபோகும் தமிழர் சொத்துகள்

தமிழர்களின் உரிமைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களது விளை நிலங்கள் அரசாலேயே சிங்களர்களுக்கு வழங்கப்படுகின்றன. தமிழர்கள் வீ்டுகளையும், விளை நிலங்களையும் இழக்கும் நிலையுள்ளது. அவர்களுக்கு அதனை பெற்றுத்தரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். வடக்கு, கிழக்கு மாகாண மீனவர்களுக்கு மீன்பிடி உரிமையும் பறிபோகிறது. தெற்கில் இருந்து சிங்களர்களை அழைத்து வந்து மீன்பிடிக்கச் செய்கின்றனர்.

இவை அனைத்தையும் சரி செய்ய அரசியல் அதிகாரம் இல்லை. 1987-ல் கிடைத்த அரசியல் அதிகாரம் போதுமானதாக இல்லை. அடுத்தடுத்து இயற்றப்பட்ட சட்டங்களால் அந்த உரிமையும் பறிபோய்விட்டது. அரசு அதிகாரிகளே மாகாண அரசின் அதிகாரத்தின் கீழ் இல்லை. வடக்கு மாகாண பகுதிகளில் ராணுவம் 1.5 லட்சம் வீரர்களை அப்புறப்படுத்த மறுக்கிறது. விளை நிலங்கள், கட்டிடங்கள் அவர்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன. மாநில அரசுகளின் உரிமைகளில் மத்திய அரசும் தலையிட்டு வருகிறது.

தமிழ் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். இடம்பெயர்ந்த தமிழர்களை மீளகுடியமர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழர் பகுதிகளில் சிங்கள செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான இலங்கை அகதிகள் இருக்கிறார்கள். இதுபோல், இலங்கையில் இருந்து வெளியேறிய 10 லட்சம் தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கிறார்கள். அவர்களை மீள் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனிநாடு என்ற கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை. ஒருங்கிணைந்த இலங்கை என்பதை முன்வைத்தே மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள். இலங்கையில் உள்ள மத்திய அரசுடன், எங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்போம். இந்திய- இலங்கை நட்புறவு முந்தைய நிலையில் தற்போது இல்லை. சீனாவுடன் இலங்கை மிகவும் நெருங்கி வருகிறது, என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x