சென்னை | இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை

இயக்குநர் அமீர் | கோப்புப் படம்.
இயக்குநர் அமீர் | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, இயக்குநர் அமீர் வீடு, அலுவலகம் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று (ஏப்.9) காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை மயிலாப்பூர், கொடுங்கையூர், நீலாங்கரை, தியாகராய நகர் எனப் பல பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்திய புகாரில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குநருமான அமீருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி - NCB) போலீஸார் சம்மன் வழங்கினர். அமீருடன் சேர்த்து அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேருக்கு டெல்லி என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அவர்கள் மூன்று பேரும் டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

அதன்படி, டெல்லி ஆர்.கே.புரம் 1-வது செக்டரில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்தில் அமீர் தனது வழக்கறிஞர்களுடன் கடந்த 2-ம் தேதி ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவருடைய வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டியிருக்கும் எனச் சொல்லி அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை முதல் சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள இயக்குநர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். அதே போல் இயக்குநர் அமீர் வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது.

மேலும், ஜாபர் சாதிக்கின் சாந்தோம் வீடு, அப்துல் பாசித் புகாரி வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்கள் என சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெறும் இடங்களில் பாதுகாப்புக்காக சிஆர்பிஎஃப் வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in