Published : 17 Jan 2014 04:31 PM
Last Updated : 17 Jan 2014 04:31 PM

தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது: ஜெயலலிதா குற்றச்சாட்டு

நதிநீர், மின்சாரம், மீனவர் பிரச்சினைகளில் தமிழக அரசுக்கு எதிராகவே காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செயல்படுவதாக தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா சாடினார்.

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் 17 ஆண்டு காலம் அங்கம் வகித்த திமுகவின் தலைவர் கருணாநிதி, தமிழக மக்களுக்கு எல்லா வகையிலும் துரோகம் இழைத்ததாகவும் குற்றம்சாட்டினார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 97-வது பிறந்தநாள் விழா கோத்தகிரி டானிங்டன் பகுதியில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பேசியது:

"கருணாநிதி தலைமை ஏற்றுள்ள திமுக 1996-ஆம் ஆண்டிலிருந்து 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நடுவில் ஓர் ஆண்டைத் தவிர தொடர்ந்து மத்திய ஆட்சியில் 17 ஆண்டு காலம் அங்கம் வகித்து வந்தது. மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியே வந்தாலும் காங்கிரசுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பவர் திமுக தலைவர் கருணாநிதி.

கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

கருணாநிதி மீது சரமாரி தாக்கு

மத்திய அமைச்சரவையில் 17 ஆண்டு காலம் அங்கம் வகித்த திமுகவால் தமிழ்நாட்டிற்கு ஏதாவது நன்மை ஏற்பட்டு இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை.

மத்திய ஆட்சியின் மூலம் தன் குடும்பத்திற்கும், தனது கட்சிக்கும் என்ன நன்மை என்று தான் சுயநலமாகவே சிந்தித்து அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்தவர் கருணாநிதி. இது போதாது என்று 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம் நாட்டையே சுரண்டியவர்கள்தான் கருணாநிதியின் குடும்பமும், திமுக-வினரும்.

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்து, தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தட்டிக் கேட்காமல்; தமிழக மக்களுக்கு எல்லா வகையிலும் துரோகம் இழைத்தவர் கருணாநிதி.

இலங்கைப் பிரச்சனையை பெயர் அளவிற்கு காரணம் காட்டி, "காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை" என்று தெரிவித்து, கடந்த ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளிவந்தார் கருணாநிதி. பிறகு சில மாதங்கள் கழித்து தன் மகள் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினர் ஆக வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சியிடம் மன்றாடினார். யாசகம் கேட்டார். காங்கிரஸ் கட்சியும் கருணாநிதியின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்தது. காங்கிரஸ் தயவில் தனது மகளை மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கினார் கருணாநிதி. இப்படி தன்னலத்திற்காகவும், தன் குடும்ப நலத்திற்காகவும், தமிழர்களின் நலன்களை தமிழ்நாட்டின் நலன்களை பல முறை தாரைவார்த்தவர் கருணாநிதி.

உண்மையிலேயே கருணாநிதிக்கு தமிழ் உணர்வு என்று ஒன்று இருந்திருந்தால்; தமிழ் மக்களின் நன்மை பற்றி கவலைப்படுபவராக இருந்திருந்தால்; தமிழர்களின் உணர்வுகளுக்கு கிஞ்சித்தேனும் மதிப்பு அளிப்பவராக இருந்திருந்தால்; 2008-ஆம் ஆண்டு மத்திய அரசு இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதங்களை வழங்கிய போதே மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிலிருந்து வெளிவந்திருக்க வேண்டும். வெளிவந்தாரா கருணாநிதி? இல்லையே!

2009-ஆம் ஆண்டு இலங்கையில் இனப் படுகொலை நடந்த போதாவது அதைத் தடுக்க முன்வராத மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிலிருந்து வெளி வந்திருக்க வேண்டும். வெளி வந்தாரா கருணாநிதி? இல்லையே! மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகத்தை தானே அரங்கேற்றினார் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்த போதாவது மத்திய ஆட்சியில் இருந்து வெளி வந்திருக்க வேண்டாமா? அல்லது மத்திய அரசை தட்டிக் கேட்டிருக்க வேண்டாமா? அதைக் கூட கருணாநிதி செய்யவில்லையே.

தற்போது மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று கூறி உள்ளார். ஆட்சி முடியும் தருவாயில் இது நாள் வரை தான் அங்கம் வகித்த ஆட்சிக்கு தலைமை தாங்கிய கட்சி அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று தெரிந்தவுடன் அதிலிருந்து வெளியேறுவது கருணாநிதிக்கு கைவந்த கலை. அந்த வகையில் தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று கூறியுள்ளார். இந்த நிலைப்பாட்டிலும் அவர் உறுதியாக இல்லை. ஏதாவது சிறிய கட்சிகள் தடுமாறி தள்ளாடி தன் வலையில் வந்து விழுமா என்று காத்துக் கொண்டிருக்கிறார். வலையில் எதுவும் சிக்கவில்லை என்றால் மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி வைப்பதற்கும் தயங்க மாட்டார் கருணாநிதி.

மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

காவேரி நதிநீர்ப் பிரச்சினை என்றாலும்; முல்லைப் பெரியாறு பிரச்சினை என்றாலும்; ஏழை, எளிய மக்கள் அன்றாடம் எரிபொருளாக பயன்படுத்தக் கூடிய மண்ணெண்ணெய் ஒதுக்கீடு பிரச்சினை என்றாலும்; தமிழக மீனவர்கள் பிரச்சினை என்றாலும்; தமிழகத்திற்கு மின்சாரம் ஒதுக்குவது குறித்த பிரச்சினை என்றாலும்; கச்சத் தீவு பிரச்சினை என்றாலும்; ஈழத் தமிழர்கள் பிரச்சினை என்றாலும்; மத்திய காங்கிரஸ் அரசு தமிழக மக்களுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

தனது தவறான பொருளாதாரக் கொள்கைகள் மூலம் பெட்ரோல், டீசல், விலை உயர்வு; அனைத்துப் பொருட்களின் விலைவாசி உயர்வு; பணவீக்கம்; விவசாய விரோதக் கொள்கை; சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு என ஏழை, எளிய மக்களை வாட்டி வதைத்து பெரும் தொழில் அதிபர்களுக்கு சாதகமாக செயல்படும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தூக்கி எறியப்பட வேண்டும்.

காங்கிரசுடன் கூட்டணி இல்லாத நிலையில் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும், தவறான கொள்கைகளுக்கும் தாங்கள் காரணம் அல்ல என்று திமுகவினர் வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பொய்ப் பிரச்சாரம் செய்வார்கள்.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகியதற்கு இவைதான் காரணங்கள் என்று மாய்மாலம் செய்வார்கள். எனவே, எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் மிகவும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.

நமது அரசின் இரண்டரை ஆண்டு கால சாதனைகளையும்; திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தமிழக மக்களுக்கு இழைத்த துரோகங்களையும்; திமுகவின் தன்னலக் கொள்கைகளையும் பட்டியலிட்டு; பட்டிதொட்டி எங்கும் பரப்பி அவர்களுடைய முகத்திரையை நீங்கள் எல்லாம் கிழித்து எறிய வேண்டும்.

தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்துக் கொண்டிருக்கின்ற காங்கிரஸ் மற்றும் தி.மு.க.-விற்கு, வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்காத வகையில் உங்களுடைய களப்பணி அமைய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கழக ஆட்சி மன்றக் குழு தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் அல்லும் பகலும் அயராது உழைக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். உங்களோடு இணைந்து நானும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்ய உள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுடைய உறுதியும், ஊக்கமும், தன்னம்பிக்கையும் தடைகளை எல்லாம் தகர்த் தெறியும் ஆற்றல் கொண்டது என்பதை நான் நன்கு அறிவேன். நாம் மேற்கொள்ள இருக்கும் கடின உழைப்பு நாற்பது தொகுதிகளையும் நமக்கு பெற்றுத் தரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் முதலவர் ஜெயலலிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x