Last Updated : 12 Apr, 2024 05:19 PM

 

Published : 12 Apr 2024 05:19 PM
Last Updated : 12 Apr 2024 05:19 PM

சாலை, குடிநீர் வசதி கோரி சூளகிரி அருகே தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

சூளகிரி அருகே மேலுமலை அடுத்த ஓட்டையப்பன் கெட்டாய் கிராமத்தில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்க கோரி கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், மேலுமலை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் ஓட்டையப்பன் கொட்டாய். விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு, இக்கிராமத்தில் 50-க்கும் அதிகமான குடியிருப்புகளில் 300-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்தக் கிராம மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு, சூளகிரி, கிருஷ்ணகிரி நகருக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக, இக்கிராமத்திற்கு செல்ல போதிய சாலை வசதிகள் இல்லாததால் ஒவ்வொரு நாளும் சிரமத்துடன் சென்று வருவதாக கூறும் பொதுமக்கள், வீடுகளில் கருப்புக் கொடி கட்டி மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கிராம மக்கள் கூறும்போது, ''பெரியகுதிபாலா கிராமத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் ஓட்டையப்பன் கொட்டாய் அமைந்துள்ளது. 6 தலைமுறைகளாக இங்கு மக்கள் வசித்து வருகிறோம். 1 கி.மீ தூரம் சாலை அமைத்து தரக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எவ்வித பயனில்லை. கடந்த சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தோம். தகவலறிந்து வந்த அலுவலர்கள், அரசியல் கட்சியினர் சமாதானம் செய்தனர். அதனை ஏற்று வாக்களித்தோம். தற்போது சாலை வசதி ஏற்படுத்தி தரவில்லை. அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை தான் உள்ளது.

கடந்த 1 ஆண்டுக்கு முன்பு, கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சொந்த செலவில் மண் சாலை அமைத்தோம். தற்போது வரை தார் சாலை வசதி இல்லை. மழைக்காலங்களில் சிரமத்துடன் செல்ல வேண்டி உள்ளது. இதே போல் குடிநீர், அங்கன்வாடி மையம் உட்பட அடிப்படை வசதிகளின்றியும் சிரமம் அடைந்து வருகிறோம். எனவே, சாலை, குடிநீர், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இல்லாவிட்டால் மக்களை தேர்தலில் புறக்கணித்து, வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்து உள்ளோம்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x