Last Updated : 12 Apr, 2024 03:39 PM

Published : 12 Apr 2024 03:39 PM
Last Updated : 12 Apr 2024 03:39 PM

“இளைஞர்களை போதைப் பொருட்களால் பாழாக்க நினைக்கிறது ஸ்டாலின் குடும்பம்” - நிர்மலா சீதாராமன் @ ஓசூர்

ஓசூரில் நடந்த பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

ஓசூர்: “போதைப் பொருட்கள் மூலம் கிடைக்கும் ஆதாயத்தில் பிழைக்கக் கூடிய எந்தக் குடும்பமும் வாழ்ந்தது இல்லை. முதல்வரின் குடும்பத்துக்கு உதயசூரியன் உதிக்கிறதோ இல்லையோ தமிழகத்தில் உதிக்கக் கூடாது” என்று ஓசூரில் நடந்த பாஜக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். மேலும், மேலும், “போதைப் பொருட்களை இறக்குமதி செய்து இளைஞர்களின் வாழ்க்கையை முழுவதுமாக பாழாக்க நினைக்கும் முதல்வரின் குடும்பத்தை நாம் மீண்டும ஒருமுறை தேர்ந்தெடுக்கக் கூடாது” என்று அவர் கூறினார்.

ஓசூர் ராம்நகரில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசியது: “எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரைப் பற்றி எந்த விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பினார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக் குறி. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக எத்தனையோ எதிர்க்கட்சிகள் உள்ள மாநிலங்களில் கூட பலவிதமான திட்டங்களை கொண்டு வந்து மக்களுக்கு நல்லது செய்துள்ளது.

உதாரணமாக, பிஎம் முத்ரா யோஜனா திட்டம் ஏழை - எளிய மக்களுக்கு எந்த ஓர் ஆவணங்களுமின்றி பிரதமர் மோடி கியாரண்டி கொடுத்து குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்குகிறார். நாடு முழுவதும் 27 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டம் 47 கோடி மக்களுக்கு சென்றுள்ளது. அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ரூ.5 ஆயிரத்து 427 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மத்திய அரசு எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளது.

பிரதமர் மோடி மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் வந்து செல்லும் பறவை போல வந்து செல்வதாக, தமிழக முதல்வர் கூறுகிறார். மைக்ரேட் பேர்ட் (Migrate Bird) என்ற வார்த்தையே தவறு. நாட்டில் உள்ள யாரும் எங்கும் செல்லலாம். ஆனால், தமிழத்துக்கு பிரதமர் வந்து சென்றால் ‘மைக்ரேட் பேர்ட்ஸ்’ என செல்கிற அளவுக்கு நமது முதல்வரின் நிலைமை உள்ளது. தமிழகத்துக்கு பிரதமர் ஒவ்வெரு முறையும் வரும்போது பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். ஆனால், பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டித் திரும்பி போ என செல்கிற அவர்கள் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி என வரும்போது கலெக்‌ஷனுக்கு மட்டும் வருகிறார்கள்.

தமிழகத்தில் மதுவைக் கொண்டு வந்ததால் குடிப்பழக்கத்தால் எத்தனை குடும்பங்கள் கஷ்டபடுகிறார்கள். இம்மாநில மக்களை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டு நல்ல வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். முதல்வர் குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காக, போதைப் பொருட்களை இறக்குமதி செய்து இளைஞர்களின் வாழ்க்கையை முழுவதுமாக பாழாக்க நினைக்கும் முதல்வரின் குடும்பத்தை நாம் மீண்டும ஒருமுறை தேர்ந்தெடுக்கக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். போதைப்பொருள் கடத்தல் வழங்கில் கைதான ஜாபர் சாதிக், அந்த குடும்பத்துடன் நேரடி தொடர்பு வைத்துள்ளார் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

போதைப் பொருட்கள் மூலமாக கோடி கோடியாக சம்பாதித்து தனது குடும்பம் வாழ வேண்டும் என நினைக்கிறார்கள். போதைப் பொருட்கள் மூலம் வரக்கூடிய ஆதாயத்தில் பிழைக்கக் கூடிய எந்தக் குடும்பமும் வாழ்ந்தது இல்லை. பிறரின் வாழ்க்கையைக் கெடுத்து, அதன் மூலம் வரக்கூடிய ஆதாயம் தமிழகத்துக்கு வேண்டவே வேண்டாம். எந்த குடும்பத்துக்கும் வேண்டாம்.

போதைப் பொருட்கள் மூலம் ஆதாயம் வைத்துக்கொண்டு அரசியல் செய்யக் கூடிய குடும்பத்தை இந்தத் தேர்தலில் நாம் நிராகரித்து தோற்க்கடிக்க வேண்டும். உதயசூரியன் அவர்களது குடும்பத்துக்கு உதிக்கிறோதோ இல்லையோ தமிழகத்துக்கு உதிக்கக் கூடாது. கிராமப் பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வு மலர வேண்டும் என்றால் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும்” என்று அவர் பேசினார்.

தெலுங்கில்... - “பின்னர் தெலுங்கில் பேசிய அவர், “இந்த நாடு முன்னேற வேண்டும் என்றால், நான்கு வர்க்கங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய இந்த நான்கு வர்க்கங்களுக்கு நல்ல பணி செய்தால், நாட்டில் சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் நல்லது நடக்கும். நாடு முன்னேற வேண்டும் என்றால் ஊழலற்ற தலைமை வேண்டும். அது பிரதமர் மோடியால் மட்டுமே கொடுக்க முடியும்.

அதேபோல் 2047-க்குள் நமது நாடு அமெரிக்கா, ஜப்பான், கொரியா போன்று நல்ல முன்னேறிய நாடுகளைப் போன்று இருக்க வேண்டும் என்றாலும் மோடியை ஆதரிக்க வேண்டும். அதேபோல் நமது நாட்டு இளைஞர்கள் அதிக சம்பளத்துக்காக வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்கின்றனர். அந்தச் சம்பளம் நமது நாட்டிலேயே கிடைக்க பிரதமரை ஆதரிக்க வேண்டும்” என்று நிர்மலா சீதாராமன் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x