Published : 11 Apr 2024 07:32 PM
Last Updated : 11 Apr 2024 07:32 PM

மீண்டும் வெல்வாரா கனிமொழி? - தூத்துக்குடி தொகுதி கள நிலவரம் என்ன? - ஓர் அலசல்

தந்தை முன்னாள் முதல்வர், சகோதரர் இன்னாள் முதல்வர் என்னும் பெருமை. திமுக என்னும் பேரியக்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் என்ற முக்கியமான பொறுப்பில் இருக்கும் கனிமொழி, திமுக சார்பாகப் போட்டியிடுவதால் 'ஸ்டார் தொகுதி' என்னும் அந்தஸ்தைத் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பெற்றிருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் திமுக சார்பாக கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரே அந்தத் தொகுதியில் களம் காணுகிறார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக விஜயசீலன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக ரொவினா ரூத் ஜென் ஆகியோர் களம் கண்டுள்ளனர். தற்போது, யார் வெல்ல வாய்ப்பு என்பதை பார்ப்பதற்கு முன்பு, தூத்துக்குடியில் சென்றமுறை கனிமொழி வென்றது எப்படி என பார்க்கலாம்.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ’பாஜக - அதிமுக’ கூட்டணி அமைத்திருந்தது. தவிர, அப்போதைய பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் அங்குப் போட்டியிட்ட நிலையிலும் திமுகதான் வெற்றி வாகை சூடியது. 2014-ம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி எம்பியாக இருந்தார். ’தீப்பெட்டி தொழில் நலிவடைந்தது, சிறு குறு தொழில்கள் வளர்ச்சியின்மை, ஸ்டெர்லைட்டை மூடாதது, அதை மூடக்கோரி 2018-ம் ஆண்டு நடந்த போராட்டத்தின்போது 13 அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது’ என அதிமுக அரசு மீதான அதிருப்தி மற்றும் பாஜக எதிர்ப்பு அலை ஆகியவை கனிமொழி வெற்றி பெற காரணமானது.

2024-ல் தேர்தல் களம் எப்படி இருக்கிறது? - கடந்த தேர்தலில் தமிழக பாஜக தலைவரே இங்கு களம் கண்டதால் தேர்தல் களம் அனல் பறந்தது. குறிப்பாக, அமித் ஷா போன்ற தேசிய தலைவர்களும் கூட தூத்துக்குடியில் மையமிட்டனர். இம்முறை இந்தத் தொகுதி கூட்டணிக் கட்சிக்கு வழங்கியிருப்பதால் பாஜக அதிக கவனம் செலுத்தவில்லை என்றே சொல்லப்படுகிறது. அதேபோல், அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் என இருவருமே இங்கு முன்பே பிரச்சாரத்தை முடித்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பரப்புரையில், திமுக வேட்பாளர் கனிமொழியை தொகுதியில் பார்ப்பதுமே குறைவுதான். மற்ற தொகுதிகளுக்குச் சென்று பிரச்சாரத்தைக் கனிமொழி மேற்கொண்டு வருகிறார். இதனால், அமைச்சர்களான அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மட்டுமே அதிகமாக தொகுதியில் காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.

அதிமுக நிலை என்ன? - அதிமுகவைப் பொறுத்தவரைப் போட்டியிடும் வேட்பாளர், தூத்துக்குடியில் பிறந்தவர் என்றாலும் அவர் இருப்பது என்னவோ சென்னையில்தான். எனவே, அவரும் தொகுதிக்குப் பரிச்சயம் இல்லாதவராக இருக்கிறார். அதிமுகவுக்கு என்று இருக்கும் பலமான வாக்கு வங்கி மற்றும் திமுக அரசு மீதான அதிருப்தி ஆகியவற்றை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார். குறிப்பாக, கனிமொழி சென்னையில் வசிப்பதைச் சுட்டிக்காட்டி, அவர் தொகுதிக்கு வரமாட்டார் என்னும் வாதங்களை முன்வைக்கிறார்.

பாஜக கூட்டணி நிலை என்ன? - பாஜக அணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயசீலன், கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் ’அதிமுக - பாஜக’ கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 42,004 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். சமீபகாலத்தில் தூத்துக்குடியில் பாஜக பலம் சற்று அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, அதை நம்பியும், தமாகா காங்கிரஸின் வாக்கு வங்கியை நம்பியும் களம் இறங்கியுள்ளார்.

மேலும், இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜக கூட்டணி இருக்கும் என்றும், மத்தியில் நிலையான ஆட்சியைப் பெற எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தமிழ் மாநில காங்கிரஸ் வாதமாக வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

நாதக நிலை என்ன? - தூத்துக்குடியில் நிலவும் முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் கடல்சார் பாதிப்புகள் ஆகியவற்றை முன்வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். நாம் தமிழர் கட்சிக்கு இருக்கும் வழக்கமான வாக்கு வங்கி கைகொடுக்கும் என்பதும் அவர்களின் எண்ணமாக இருக்கிறது.

சிட்டிங் எம்பி கனிமொழி செயல்பாடு என்ன? - 2019-ம் ஆண்டு வென்று சிட்டிங் எம்பியாக இருக்கும் கனிமொழி சில முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை என்னும் குற்றச்சாட்டுகளும் தொகுதி மக்கள் சார்பாக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, “ரயில் சேவையில் தூத்துக்குடி பின்தங்கியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத தொழிற்சாலைகள் அமைக்க தவறியது, போக்குவரத்து நெருக்கடியைத் தீர்க்க மேம்பாலம், சுரங்கப்பாதைகள் அமைக்காதது, கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காதது” போன்ற குற்றச்சாட்டுகளை மக்கள் முன்வைக்கின்றனர்.

திருச்செந்தூரில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும். தாமிரபரணி பாசன குளங்களைத் தூர்வாரி சீரமைக்க வேண்டும் எனப் பல கோரிக்கைகளை மக்கள் முன்வைக்கின்றனர்.

திமுக சார்பாகக் கடந்த முறை போட்டியிட்ட கனிமொழி, தூத்துக்குடிக்குப் பிரத்யேகமாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் கொடுத்த வாக்குறுதிகளில் பெருமளவு நிறைவேற்றிவிட்டதாகவும், குறிப்பாக ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடியதையும் குறிப்பிட்டு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் வசிப்பவராக இருந்தாலும் கடந்த 5 ஆண்டுகளில் தூத்துக்குடி மக்களாக மாறிவிட்டதாக அதிமுக முன்வைக்கும் விமர்சனத்துக்கும் கனிமொழியே பதிலளித்தார். தவிர, அதிமுக வேட்பாளரும் சென்னையில்தான் இருக்கிறார் என விமர்சித்தார். அதேபோல், சமீபத்தில் பெய்த மழையால் தூத்துக்குடி பெரும் பாதிப்பைச் சந்தித்தது. அதை சரிசெய்ய தமிழகத்துக்குப் பேரிடர் நிதியை பாஜக அரசு ஒதுக்கவில்லை எனக் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

தூத்துக்குடி களத்தில் திமுக - அதிமுக - தமாகா இடையே மும்முனை போட்டி இருப்பதாக சொன்னாலும், தற்போது ரேஸில் திமுகவின் கனிமொழி சற்றே முன்னிலையில் இருப்பதாகவே தகவல் சொல்லப்படுகிறது. ஆனால், தேர்தல் நெருங்கும் வேளையில் இதில் மாற்றம் நிகழலாம். எனவே, யார் வெல்லுவார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x