Published : 11 Apr 2024 04:53 PM
Last Updated : 11 Apr 2024 04:53 PM

18+ சந்தேகம் முதல் போலி வாக்காளர் வரை: வாக்குச்சாவடி நடைமுறைகள் என்னென்ன?

மதுரை: வாக்களிக்க வரும் நபரின் தோற்றம் 18 வயது இருக்காது என வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கருதினால் அவர் என்ன செய்யலாம் என்ற அதிகாரத்தை தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தலில் வழங்கியுள்ளது.

வாக்குச்சாவடிகளில் பெரும்பாலும் வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான ஒருவருக்கு வாக்களிப்பார்கள். அதை தவிர்த்து, யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள், நோட்டோவுக்கு செலுத்துவார்கள். இந்த இரு வாக்குகள் விவரம்தான் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். ஆனால், இந்த இரண்டு வாக்குகளையும் தவிர்த்து வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வாக்களிக்கும் வாக்குகள் பலவகையாக உள்ளன.

அந்த வாக்குகள் எதிர்க்கப்பட்ட வாக்குகள், வயதில் இளையோர் வாக்கு, பார்வையற்றோர் வாக்குகள், வாக்களிக்க விரும்பாதோர் வாக்கு, நோட்டா, ஆய்வுக்குரிய வாக்குகள், வாக்களிப்பதை செய்தல் வாக்கு, 49 எம்ஏ, ஏஎஸ்டி(Absent, shifted, death) வாக்காளர், ஈடிசி (Election dudty certificate) வாக்காளர், பதிலி வாக்கு ஆகிய 11 வகை உள்ளன.

இது குறித்து தேர்தல் அலுவலர்கள் கூறுகையில், ''வாக்காளர் ஒருவர் வாக்குச்சாவடிக்குள் நுழையும்போது அந்த நபர் இவர் இல்லை என வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் எதிர்ப்பு தெரிவித்த நபரின் ரூ.2-ஐ பெற்று வாக்குசாவடி தலைமை அலுவலர், அதற்கான ரசீதை வழங்க வேண்டும். பி்ன்னர் படிவம் 14-ல் எதிர்க்கப்பட்ட வாக்காளர் பெயர் மற்றும் முகவரியை எழுதி வாக்காளரை கையொப்பம் அல்லது விரல் ரேகை பதிக்க கூற வேண்டும். அவர் மறுக்கும் பட்சத்தில் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது.

அவர் கையொப்பம் அல்லது விரல் ரேகை பதிக்க ஒப்புக் கொண்டால் அந்த வாக்காளர் கொண்டு வந்திருக்கும் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் பட்டியல், வாக்காளர் வயது ஆகியவற்றை சரிப்பார்த்து அந்த நபர் சரியான நபர்தான் என தெரிந்தால் அவரை பேலட் யூனிட்டில் வாக்களிக்க அனுமதிக்கலாம். வாக்குச்சாவடி முகவரிடம் பெற்ற ரூ.2-ஐ திருப்பி ஒப்படைக்காமல் அரசு கணக்கில் வர வைக்க வேண்டும். மாறாக வாக்குச்சாவடி முகவர் எதிர்ப்பு தெரிவித்தபோல் அந்த வாக்காளர் போலியானவர் என தெரிய வந்தால் அவரை போலீஸ் வசம் ஒப்படைத்து எழுத்துப்பூர்வமாக புகாரை காவல்நிலையத்தில் அளிக்க வேண்டும். மேலும், வாக்குச்சாவடி முகவரிடம் பெற்ற ரூ.2-ஐ அவரிடம் திருப்பி ஒப்படைத்து ஒப்புகை பெற வேண்டும்.

அதுபோல், வாக்களிக்க வரும் நபரின் தோற்றம் 18 வயதிற்கு குறைவாக இருக்கும் என வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கருதினால் அவரிடம் வயது குறித்த சான்றிதழ் படிவத்தில் (declaration about age) ஒப்பம் பெற்று அவரை வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கலாம்.

பார்வையற்றோர் வாக்களிக்க ஒருவரை உடன் அழைத்து வரலாம். அவருக்கு 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். ஒரு வாக்காளர் நோட்டோ உள்பட எந்த கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள், 17ஏ என்ற படிவத்தில் எதற்காக மறுக்கிறார் என்ற அவரிடம் எழுதி பெற வணே்டும்.

எந்த கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களுக்கு நோட்டோவுக்கு வாக்களிக்கலாம். ஒரு வாக்காளரின் வாக்கை வேறொருவர் பதிவு செய்துவிட்டு சென்றுவிட்டால் உண்மையான நபர் வாக்களிக்க வரும்போது சிக்கல் ஏற்படும். அப்போது அவர் உண்மையான வாக்காளர் என கருதினால் அவரை டெண்டர் வாக்கு சீட்டு ஒன்றையும், ஆரோ கிராஸ் மார்க்கையும் கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கலாம். அதுபோல், யாருக்கு வாக்களிக்கப் போகிறேன் என்று கூறிவிட்டு வாக்களிப்போரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பலாம்.

வாக்காளர் ஒருவர் தான் வாக்களித்த நபர் அல்லது வேறொரு வேட்பாளரின் பெயரையும், சின்னத்தையும் காட்டுவதாக கூறினால், அவரிடம் எழுத்துமூலமான வாக்குமூலம் பெற வேண்டும். தொடர்ந்து இரண்டாவது நபரை வாக்களிக்க அனுமதிக்கும்போது முதல் வாக்காளர் கூறியதுபோல் இவருக்கும் வேறோரு வேட்பாளர் பெயரையும், சின்னத்தையும் காட்டினால் இந்த தகவலை வாக்குச்சாவடி அலுவலர் உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவவருக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும், தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குகள் பதிவு செய்வதை நிறுத்திவிட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் அளிக்கும் உத்தரவின்படி செயல்பட வேண்டும். தேர்தல் பணியாணைப் பெற்று ஒரே மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியாற்றியும் எவரும் அதே மக்களவைத் தொகுதிக்குட்பட்ட எந்த வாக்குச்சாவடியிலும் வாக்களிக்கலாம்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x