Last Updated : 11 Apr, 2024 03:11 PM

 

Published : 11 Apr 2024 03:11 PM
Last Updated : 11 Apr 2024 03:11 PM

“என் மீதான பயத்தால் நாதக சின்னம் பறிப்பு” - சீமான் காட்டம் @ நாமக்கல்

நாமக்கல்லில் சீமான் பிரச்சாரம் மேற்கொணடார்.

நாமக்கல்: “70 ஆண்டுகளுக்கு மேல் ஒரே சின்னம் உதயசூரியன், 60 ஆண்டுகளாக அதிமுகவுக்கு இரட்டை இலை. கை சின்னத்தில் காங்கிரஸ் கட்சியும், தேசிய மலரான தாமரை சின்னத்தில் பாஜகவும் போட்டியிடுகிறது. பாமகவுக்கு மாம்பழம், டிடிவி தினகரனுக்கு குக்கர், ஜி.கே.வாசனுக்கு சைக்கிள், என்னுடைய விவசாயி சின்னம் எங்கே? அதை எடுத்துக் கொண்டனர். விவசாயி சின்னத்துடன் சீமானை தேர்தலை சந்திக்க விடக்கூடாது என்ற பயம்” என்று நாமக்கல்லில் நடந்த பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

மக்களவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வியாழக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் அவரவர் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

70 ஆண்டுகளுக்கு மேல் ஒரே சின்னம் உதயசூரியன், 60 ஆண்டுகளாக இரட்டை இலை சின்னம். கை சின்னத்தில் காங்கிரஸ், தேசிய மலரான தாமரை சின்னத்தில் பாஜக போட்டியிடுகிறது. பாமகவுக்கு மாம்பழம், டிடிவி தினகரனுக்கு குக்கர், ஜி.கே.வாசனுக்கு சைக்கிள், என்னுடைய விவசாயி சின்னம் எங்கே? அதை எடுத்துக் கொண்டனர். ஏன் எடுத்தனர்? பயம். அந்த சின்னத்துடன் சீமானை தேர்தலை சந்திக்க விடக் கூடாது என்ற பயம்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதேபோல், 40 தொகுதிகளைக் கொண்ட பிஹாரில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. 42 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக தேர்தல். 14 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாமில் 3 கட்டங்களாக தேர்தல். புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் ஒரே கட்டத் தேர்தல். பாஜக முதலில் இங்கு தேர்தல் நடத்த காரணம், எங்கே பலவீனமாக இருக்கிறோமோ அங்கு சென்று பணியாற்ற வேண்டும் என்பதற்காகத்தான்.

திரும்ப திரும்ப மோடி ஓடி ஓடி வருகிறார். ஏன்? எப்படியாவது அந்த வாக்கு இயந்திரத்துக்குள் வேலையைக் காட்டி பாஜக வென்றுவிட்டதாக காட்ட வேண்டும். தேர்தல் பணிகளை மேற்கொள்ள மிகவும் குறைவான நாட்களே இருந்தன.

இன்னும் ஒரு 10 நாட்கள் கூட கொடுத்தால், என்ன ஆகும். மீண்டும் மீண்டும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்திருப்போம். மற்ற கட்சிகள் அவர்களது சின்னத்தில் நிற்கின்றனர். ஆனால், எங்களுக்கு தேர்தலுக்கு முதல் நாள் ஒரு சின்னத்தை கொடுக்கின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள், அரிசி, லேப்டாப், சைக்கிள் என நலத்திட்ட உதவிகளில் அவர்களது கட்சியின் சின்னத்தை ஒட்டித்தருவார்கள். நாங்கள் என்ன செய்வோம்?

இந்தி தெரியாது போடா என கூறுகின்றனர். ஆனால், கேலோ இந்தியா என பெயர் வைக்கின்றனர். காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் தராத காங்கிரஸ் கட்சியுடன் எதற்காக கூட்டணி வைக்க வேண்டும். ஒரு சொட்டு தண்ணீர் தராத காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஓட்டு கூட போட மாட்டோம் என தமிழ் மக்கள் முடிவெடுக்காதவரை மாற்றம் வராது. கர்நாடகா என வந்துவிட்டால் பாஜக, காங்கிரஸ் கட்சியும் மாநில கட்சியாகிவிடும்.

தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலம் தமிழ் படித்தவர்களுக்கு அரசுப் பணி கிடைத்து வந்தது. அதுவும் திறந்துவிடப்பட்டு விட்டது. யார் வேண்டுமானாலும் தேர்வெழுதி பணிக்கு வரலாம் என கையெழுத்திட்டு கொடுத்தது கடந்த அதிமுக அரசு. பாஜக, காங்கிரஸ் என 18 ஆண்டுகள் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தது திமுக. இத்தனை ஆண்டுகளில் எந்த உரிமையையும் திமுக பெற்றுத்தரவில்லை. இப்போது திருக்குறளை தேசிய நூலாக்குவேன் என்கின்றனர். இந்த தேர்தல் அறிக்கையில் தான் கச்சத்தீவை மீட்பேன் என திமுக கூறவில்லை. ஏனெனில் அந்த பொறுப்பு நாம் தமிழர் கட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆந்திராவில் செம்மரக் கட்டையை வெட்டியதாக கூறி சந்திரபாபு நாயுடு ஆட்சியின்போது 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுபற்றி அதிமுக, திமுக எந்த கட்சியாவது கேள்வி எழுப்பியதா? இல்லை. தமிழ் மக்களின் உயிரை பற்றி கவலைப்படாத கட்சிக்கு எதுவுக்கு ஓட்டு போட வேண்டும்.பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆந்திரா வங்கி உள்ளது. ஏன் தமிழ்நாடு வங்கி இல்லை. தமிழ்நாடு வங்கி ஏற்படுத்துவேன் என திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஆனால் ஏற்படுத்தவில்லை. நாம் தமிழர் கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தமிழர் வைப்பகம் ஏற்படுத்தப்படும். அதன்மூலம் விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்களுக்கு மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.

கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி செய்தும் எந்த மாற்றமும் செய்யவில்லை. மாதம் ரூ.1,000 வாங்கும் பெண்ணின் தலையில் ரூ. 1 லட்சம் கடன் உள்ளது. அரிசி, பருப்பு என உணவுப் பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி சுமத்தி ஏழை மக்கள் வாழவே முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளனர். இதை மாற்ற வேண்டும். கிளீன் இந்தியா பிரதமர் மோடி கொண்டு வந்தார். ஏன் க்ரீன் இந்தியா கொண்டு வரவில்லை. பருவநிலை மாறிவிட்டது என எல்லா ஆய்வறிக்கைகளும் சொல்கின்றன. ஆலைகள் நிறுவுவதே இதற்கு காரணம்.

புவி வெப்பமாயமாவதை தடுக்க மரம் நட வேண்டும். மரம் தான் மண்ணின் வரம். அதை வளர்ப்பதே அறம். மரம் வளர்த்தால் ஆண்களும் தாயாகலாம். சுவாசிப்பது மாறி வாசிப்பதையும் வைத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு பழக்கமாக்குங்குள். தேடித் தேடி படியுங்கள். அறிவைத் தேடி ஓடுங்கள் நாளைய வரலாறு உங்கள் நிழலைத் தேடி வரும் என அம்பேத்கர் கூறுகிறார்.

மக்கள் இந்த தேர்தலில் மிக கவனமாக வாக்களிக்க வேண்டும். சமாதி கட்ட நூற்றுக்கணக்கான கோடி செலவளிக்கும் இந்த ஆட்சியாளர்களால் முறையாக ஒரு பள்ளிக் கட்டிடம் கட்ட முடியவில்லை. செஞ்சியில் கட்டிட பள்ளிக் கட்டிடம் கட்டி முடித்து 6 மாதத்தில் இடிந்து விழுந்தது. தேர்தலுக்கு ஒரு நாள் முன் எனக்கு ஒரு சின்னம் கொடுக்கின்றனர்” என்று பேசினார். இப்பிரச்சாரத்தின் போது, கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x