Published : 11 Apr 2024 03:41 PM
Last Updated : 11 Apr 2024 03:41 PM

தஞ்சாவூர் தொகுதியில் முந்துவது யார்? - கள நிலவர பார்வை

செங்கிப்பட்டி பகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் ச.முரசொலி. படம்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர்: விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளர்களின் அனல் பறக்கும் பிரச்சாரத்தால் தஞ்சாவூர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தொகுதியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இங்கு திமுக சார்பில் ச.முரசொலி, அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக பி.சிவநேசன், பாஜக சார்பில் கருப்பு எம்.முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் ஹிமாயூன் கபீர் என மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், பிரதான 4 கட்சிகளிடையே தான் போட்டி நிலவுகிறது.

முந்தும் முனைப்பில் முரசொலி: திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ச.முரசொலிக்கு ஆதரவாக எம்.பி. எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், கா.அண்ணாதுரை, நா.அசோக்குமார், மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்- அரியலூர் ரயில் புதிய வழித்தடம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தஞ்சாவூர் தொகுதியில் கொண்டு வர திமுகவுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், விசிக மற்றும் விவசாய சங்கங்களும் இவருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்து வருவதாலும், திமுகவின் நலத்திட்டங்கள் கைக்கொடுக்கும் என்பதாலும் மற்ற வேட்பாளர்களை முந்தி எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என வேட்பாளர் முரசொலி நம்பிக்கையுடன் உள்ளார்.

இவர் நேற்று செங்கிப்பட்டி, புதுப்பட்டி, ராயமுண்டான்பட்டி உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்களிடம், திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். மேலும், இவருக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வைகோ, தர் வாண்டையார் போன்றவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதால் வெற்றிக்கனியை சுவைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் கூடுதல் தெம்புடன் வலம் வருகிறார் முரசொலி.

சிட்டாய் பறக்கும் சிவநேசன்: அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் தீவிரமாக சுழன்று தேர்தல் பணியாற்றி வருகிறார். பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் வாக்காளர்களை கவரும் விதமாக கும்மியடிப்பது, கோலம் போடுவது, கடைகளில் டீ போட்டுத் தருவது என பல்வேறு பிரச்சார யுக்திகளை கையாண்டு வருகிறார். முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுகவினரும் களத்தில் குதித்து ஆதரவு திரட்டி வருவது சிவநேசனுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

பட்டுக்கோட்டையில் நேற்று முரசு கொட்டி வாக்கு சேகரித்த
தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன்.

இவர் நேற்று பட்டுக்கோட்டை பாளையம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது மத்திய அரசின் திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு வந்து சேர்க்கவும், விவசாயிகளுக்கு பல திட்டங்களை கொண்டு வரவும் தேமுதிகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், அவருக்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆகியோரும் பிரச்சாரம் செய்துள்ளது, தனக்கு வெற்றி முரசு கொட்டும் என சிவநேசன் நம்பிக்கையுடன் உள்ளார்.

களத்தில் கலக்கும் ‘கருப்பு’ - பாஜக சார்பில் போட்டியிடும் கருப்பு எம்.முருகானந்தம் 2014 தேர்தலில் தவற விட்ட வெற்றி வாய்ப்பை இந்த முறை பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு ஆதரவாக அமமுகவினர் மற்றும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்டோரும் களம் இறங்கியுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு செய்த திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகளின் பட்டியல்களை கையில் வைத்துக் கொண்டு, அதற்காக ஒரு தனி டீம் செயல்பட்டு பாஜகவுக்கு ஆதரவை திரட்டி வருகிறது. வேட்பாளர் முருகானந்தம் நேற்று பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம், தாமரங்கோட்டை, இடையங்காடு, பழஞ்சூர், அதிராம்பட்டினம் பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

மல்லிப்பட்டினத்தில் முஸ்லிம்களைச் சந்தித்து ஆதரவு
திரட்டிய பாஜக வேட்பாளர் கருப்பு எம்.முருகானந்தம்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘இப்பகுதியில் மீனவர்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், விவசாயிகளுக்கான நிதியுதவி தொடரவும் பாஜகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார். இத்தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்துக்கு பின் இக்கட்சியினர் உற்சாகமடைந்து, தாமரையை மலர வைக்க பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர்.

நம்பிக்கையுடன் நாம் தமிழர்: இருமுறை சட்டப்பேரவைத் தேர்தலில் களம் கண்ட அனுபவங்களை பாடங்களாக கொண்டு, தற்போது இளைஞர்கள் மத்தியில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹுமாயூன் கபீர். இந்த முறை மைக் சின்னத்தில் போட்டியிடும் இவர், நீர் மேலாண்மை, விவசாய விளைப் பொருட்கள் சேமிப்பு கிடங்குகள் போன்ற பிரதான திட்டங்களை பிரச்சாரங்கள் மூலம் பொதுமக்களிடம் எடுத்து கூறி வருகிறார்.

இவர் நேற்று பட்டுக்கோட்டை அருகே கரம்பயம், பாப்பாநாடு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாக்கித் தரப்படும். தனியாருக்கு நிகராக கல்வி, மருத்துவம் ஆகியவை அளிக்கப்படும். பொருளாதார திட்டங்கள் உருவாக்கித் தரப்படும் என வாக்குறுதி வழங்கிப் பேசினார்.

பட்டுக்கோட்டை அருகே கரம்பயத்தில் நேற்று கட்சியினருடன் வாக்கு சேகரிப்பில்
ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹிமாயூன் கபீர்.

இவர்கள் மட்டுமில்லாமல் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயி என்.செந்தில்குமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, விவசாயிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறார். இவருக்கு ஆதரவாக அச்சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் காவிரி பிரச்சினை, மேகேதாட்டு விவகாரம் போன்ற பிரச்சினைகளை எடுத்துக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நகர்ப் புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தஞ்சாவூர் தொகுதியில் எப்படியாவது வெற்றிக் கனியை பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேட்பாளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x