Published : 10 Apr 2024 09:08 PM
Last Updated : 10 Apr 2024 09:08 PM

மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேச வாய்ப்பு மறுப்பு: மதுரையில் காங். நிர்வாகிகள் வருத்தம்

மதுரை: மதுரையில் செவ்வாய்க்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயார் செய்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு பேச வாய்ப்பு வழங்காதது, காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இண்டியா கூட்டணி சார்பில் மதுரை மக்கவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், சிவகங்கையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் மதுரை வண்டியூர் ‘ரிங்’ ரோட்டில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து மதுரை வந்தார்.

கார்த்திக் சிதம்பரம், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மகன் என்பதால் அவர், இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வருவதற்கு பல மணி நேரத்துக்கு முன்பே பொதுக்கூட்ட மேடைக்கு வந்து காத்திருந்தார். அதுபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனும், சு.வெங்கடேசனுக்காக கலந்து கொண்டார். விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட பிற கூட்டணிக்கட்சி மாநில தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

ஆனால், இக்கூட்டத்தில் வேட்பாளர்கள் சு.வெங்கடேசன், கார்த்திக் சிதம்பரம், திமுக மாவட்டச் செயலாளர்கள் பி.மூர்த்தியை தவிர மற்றவர்கள் யாருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் பிரதான தலைவரும், அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரித்தவருமான முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு மட்டுமாவது பேச வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என அக்கட்சியினர், வருத்தம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியது: “முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்தான், காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான தேர்தல் அறிக்கையை தயாரிப்பு குழுவில் முதன்மையானவராக இருந்துள்ளார். அதை இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது பேச்சில் முக்கியமாக குறிப்பிட்டு பேசினார். இந்தியாவுக்காக பல நல்ல திட்டங்களை கொடுத்தவர் ப.சிதம்பரம் . இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திய பொருளாதார அறிஞர். இந்தியாவின் கதாநாயகனாக தற்போது திகழும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரித்தவர், என்று பெருமையாக குறிப்பிட்டார். ஆனால், ப.சிதம்பரத்துக்கு மேடையில் பேச வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

அவரை பேச அனுமதித்திருந்தால் அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் சாரம்சத்தையும், மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைய வேண்டிய அவசியத்தையும் எடுத்துக் கூறியிருப்பார். அது கூட்டத்தில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான கூட்டணிக்கட்சி தொண்டர்கள், பொதுமக்களிடம் சென்றடைந்து இருக்கும். போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் பலத்தை ஏற்படுத்தியிருக்கும். அதுபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணனுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு சரியாக 6.50 மணிக்குதான் வந்தார். ஆனால், ப.சிதம்பரமும், பாலகிருஷ்ணனும் முதல்வர் வருவதற்கு சில மணி மணி நேரத்துக்கு முன்பே வந்துவிட்டனர். அதனால், முதல்வர் வருவதற்கு முன் மேடையில் அமர்ந்திருந்த அவர்களை திமுகவினர் நினைத்து இருந்தால் பேச அனுமதித்து இருக்கலாம். ஆனால், அவர்கள் அதற்கு வாய்ப்பு கொடுக்காததின் பின்னணியில் திமுக கட்சி மேலிடம் இருக்கலாம். அப்படி ப.சிதம்பரத்தையும், பாலகிருஷ்ணனையும் பேச அனுமதித்திருந்தால் அது கூட்டணி கட்சி தேர்தல் பிரச்சார மேடையாகி இருக்கும்.

அந்த வாய்ப்பை விட்டுக்கொடுக்காமல் திமுகவும், அதன் முதல்வர் மு.க.ஸ்டாலினும் மட்டுமே இக்கூட்டத்தில் பிரதானமாக முன்னிலைப்படுத்தப்பட்டது. இவ்வளவுக்கும், மதுரை, சிவகங்கை தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை. கூட்டணிக்கட்சிகளான மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள்தான் போட்டியிடுகிறார்கள். எனவே, மேடையில் அமர்திருந்த ப.சிதம்பரத்தையும், பாலகிருஷ்ணனையும் பேச அனுமதித்திருக்க வேண்டும். ஒருவேளை இதற்கு திமுக மேலிடத்திடம் அனுமதி பெற வேண்டியிருந்தால் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்காவது கொண்டு போய் இருக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x