Published : 10 Apr 2024 10:56 AM
Last Updated : 10 Apr 2024 10:56 AM

‘ஸ்டார் தொகுதி’ சிவகங்கை கள நிலவரம் என்ன? - ஒரு பார்வை

கார்த்திசிதம்பரம், தேவநாதன், சேவியர்தாஸ்,

வீரம் செறிந்த சீமை என்று அழைக்கப்படும் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதால் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது.

இதில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருமயம், ஆலங்குடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இத்தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் 5,66,104 வாக்குகளும், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜகவின் ஹெச்.ராஜா 2,33,860 வாக்குகளும், அமமுக சார்பில் போட்டியிட்ட தேர்போகி பாண்டி 1,22,534 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட சக்தி பிரியா 72,240 வாக்குகள், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட கவிஞர் சிநேகன் 22,931 வாக்குகளும் பெற்றனர். இதில் கார்த்தி சிதம்பரம் 3,32,244 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த முறையும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரமே மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுகவில் சேவியர்தாஸ், பாஜக கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தேவநாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி உள் ளிட்ட 20 பேர் போட்டியிடுகின்றனர். கார்த்தி சிதம்பரத்துக்கு திமுக கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் பெரும் பலமாக அமைந்துள்ளது.

எழிலரசி

கூடவே, தமிழக அரசிடம் பேசி காரைக்குடி பகுதிக்கு வேளாண், சட்டக் கல்லூரிகளைக் கொண்டு வந்தது போன்ற பணிகள் அவருக்கு சாதகமாக உள்ளன. அவரது கட்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி தரப்பினர் எதிர்ப்பாக இருப்பது, தொழில் வளர்ச்சிக்கு முயற்சி எடுக்காதது, எளிதில் அணுக முடியாதது போன்றவை அவருக்கு பின்னடைவைத் தந்தாலும், கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து சுறுசுறுப்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார் கார்த்தி சிதம்பரம்.

அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸுக்கு சார்ந்த சமூகத்தினர் இந்த தொகுதியில் அதிகம் உள்ளது. அவருக்கு சாதகமான அம்சம் என கூறப்படுகிறது. தேர்தல் அரசியலுக்கு அவர் புதியவர்தான் என்றபோதிலும், அதிமுகவின் பாரம்பரிய வாக்கு பலம், பிரதான எதிர்க்கட்சியின் வேட்பாளர் என்ற அந்தஸ்து ஆகியவை அவருக்கு கை கொடுக்கின்றன. பாஜக கூட்டணியில் போட்டியிடும் தேவநாதனுக்கும் சமூகம் சார்ந்த பலம் இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும், வளர்ந்து வரும் கட்சியான பாஜக, தினகரனின் அமமுக, ஓபிஎஸ் அணி ஆகிய கூட்டணிக் கட்சியினர் தொகுதியில் கணிசமாக வாக்குகளை கொண்டிருப்பது அவருக்கு சாதகமாக விளங்குகின்றன. வெளியூரைச் சேர்ந்தவர், அவரை எளிதில் அணுக முடியாது போன்ற விமர்சனங்கள் இருந்தாலும், கூட்டணிக் கட்சியினருடன் தொடர் பிரச்சாரத்தில் மும்முரமாக இருக்கிறார் தேவநாதன்.

கூட்டணியின்றி தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி, சின்னம் புதிது என்றாலும் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஏற்கெனவே சீமான் தொகுதிக்கு வந்து எழிலரசிக்காக பிரச்சாரம் செய்தது நாம் தமிழர் கட்சியினருக்கு புதிய உற்சாகத்தை தந்துள்ளது. எனவே, எல்லா தொகுதிகளையும் போலவே சிவகங்கையிலும் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

மக்களின் எதிர்பார்ப்புகள்: பின்தங்கிய சிவகங்கை தொகுதியில் புதிய தொழில்களைத் தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், காரைக்குடி, திருப்பத்தூர் வழியாக திண்டுக்கல்லுக்கும், தொண்டி, சிவகங்கை வழியாக மதுரைக்கும் புதிய ரயில் வழித்தடங்களை ஏற்படுத்துதல், காரைக்குடி செட்டிநாடு விமானநிலையம், சிவகங்கை கிராபைட் உபத்தொழிற்சாலைகள் ஏற்படுத்துவது, சிங்கம்புணரியில் கயிறு வாரியம் போன்றவை இந்த தொகுதி மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக உள்ளது.

7 முறை வென்ற ப.சிதம்பரம்: கடந்த 1967-ல் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து பிரிந்த சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 1967-71, 1971-77 ஆகிய 2 முறை திமுகவின் தா.கிருஷ்ணன், 1977-80-ல் அதிமுகவின் தியாகராஜன், 1980-84-ல் காங்கிரஸின் ஆர்.வி.சுவாமிநாதன், 1984-89, 1989-91, 1991-96, 2004-09, 2009-14 ஆகிய 5 முறை காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் 1996-98, 1998-99 ஆகிய 2 முறை தமாகாவில் ப.சிதம்பரம், 1999-2004-ல் காங்கிரஸின் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், 2014-19-ல் அதிமுகவின் செந்தில்நாதன், 2019-ல் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஆண் வாக்காளர்கள்: 8,02,283

பெண் வாக்காளர்கள்: 8,31,511

இதர வாக்காளர்கள்: 63

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x