Published : 29 Mar 2018 07:45 AM
Last Updated : 29 Mar 2018 07:45 AM

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தீவிரம்: குழந்தைகள் காப்பகத்துக்கு மக்கள் பூட்டு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ.குமரெட்டியாபுரம் கிராம மக்களின் போராட்டம் 45-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. அத்திமரப்பட்டியில், ஸ்டெர்லைட் குழந்தைகள் காப்பகத்தை மக்கள் பூட்டினர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்க பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். ஆலையை முழுமையாக மூட வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஆலைக்கு அருகேயுள்ள அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள், ஊரின் மையப்பகுதியில் உள்ள வேப்பமர நிழலில் அமர்ந்து நேற்று 45-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களை நேற்று முன்தினம் இரவு, சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதி நிர்வாகி பாலபிரஜாபதி அடிகளார் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டி கிராமத்தில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில், குழந்தைகள் பாதுகாப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் 5 வயதுக்கு உட்பட்ட 35 குழந்தைகள் பயின்று வருகின்றனர். நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கிராம மக்கள் திரண்டு சென்று குழந்தைகளையும், 2 பணியாளர்களையும் வெளியேற்றிவிட்டு, இனிமேல் இந்த மையம் எங்கள் ஊருக்கு தேவையில்லை எனக் கூறி பூட்டு போட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் தீவிரமாகியுள்ளதைத் தொடர்ந்து தூத்துக்குடி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x