Published : 09 Apr 2024 03:04 PM
Last Updated : 09 Apr 2024 03:04 PM

“காங். தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி விமர்சித்த விதம் விஷமத்தனம்!” - செல்வப்பெருந்தகை காட்டம்

செல்வப்பெருந்தகை | கோப்புப்படம்

சென்னை: “தேர்தல் பத்திர நன்கொடை மூலம் நன்கொடைகளை குவித்ததும், அதன்மூலம் தேர்தல் களத்தில் சாதகமான சூழலை உருவாக்குவதிலும் பிரதமர் மோடி தற்காலிகமாக வெற்றி பெற்றிருக்கலாம்.ஆனால், நாட்டு மக்களின் வாழ்வாதாரம் சீரழிக்கப்பட்டு, பொருளாதார பாதிப்பின் காரணமாக பாஜக ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்ட நியாய பத்ரா என்ற தேர்தல் அறிக்கை நாட்டிலுள்ள அனைத்து மக்களிடையேயும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருவதை சகித்துக் கொள்ள முடியாத பிரதமர் மோடி, நச்சுத்தனமான கருத்துகளை கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை விடுதலை போராட்ட காலத்தில் முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கையை போல அமைந்திருப்பதாக கூறியிருக்கிறார்.

ஆனால், பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் 1937-ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு 1940-ல் வங்காளத்தில் முஸ்லிம் லீக் தலைமையிலான அமைச்சரவையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்த இன்றைய பாஜகவின் நிறுவன தலைவர் ஷியாம பிரசாத் முகர்ஜி பங்கேற்றதை எவரும் மறைத்துவிட முடியாது. மக்களை பிளவுபடுத்துகிற அரசியலின் அடிப்படையில் பிரதமர் மோடி இத்தகைய விஷமத்தனமான கருத்துகளை கூறியிருக்கிறார். பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர் பிரதான எதிர்கட்சியின் தேர்தல் அறிக்கையை பற்றி இவ்வளவு தரம் தாழ்ந்து கருத்து கூறியிருப்பது அரசியல் நாகரிகமற்ற செயலாகும்.

இந்தியாவை உலக பொருளாதார வல்லரசுகளில் மூன்றாவது இடத்துக்கு உயர்த்தப் போவதாக பிரதமர் மோடி பலமுறை கூறியிருக்கிறார். ஆனால், 140 கோடி இந்தியர்களின் வாழ்வாதாரத்தை ஆய்வு செய்கிற பல்வேறு சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங்களுடன் அதிர்ச்சி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. சமீபத்தில் உலக சமத்துவமின்மை பரிசோதனைக் கூடம் என்கிற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் 1922 முதல் 2023 வரை நிலவுகிற வருமான சமமின்மை குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஏழைகளின் வாழ்வாதாரம் உயர்ந்ததை விட கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை தான் அதிகரித்து வருவதாக அந்த அறிக்கை கூறியிருக்கிறது.

இந்தியாவில் நிலவும் வருமான சமத்துவமின்மை பற்றி குறிப்பிட்ட அந்த அறிக்கை 2022-23 இல் மக்கள் தொகையில் 22.6 சதவீதத்தினரின் தேசிய வருமானம் 1 சதவீதம் தான் உயர்ந்திருக்கிறது. இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வருமான வேறுபாடு அதிகரித்திருப்பதை உறுதி செய்கிறது. அதேபோல, சொத்து சமத்துவமின்மையில் மேல்தட்டில் உள்ள 1 சதவீதத்தினரின் சொத்து 2022-23 இல் 40.1 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறிப்பிட்ட 1 சதவீதத்தினர் சொத்துகளை குவிப்பதில் வெற்றிபெற்றிருக்கின்றனர்.

மேலும், 10 சதவீத கோடீஸ்வரர்களின் சொத்து பலமடங்கு கூடியிருப்பதை இந்த புள்ளிவிவரம் உறுதிப்படுத்துகிறது. அதற்கு மாறாக, கீழ்நிலையில் உள்ள 50 சதவீத மக்களின் சொத்து பலமடங்கு ஆண்டுக்கு ஆண்டு குறைந்திருக்கிறது. பணக்காரர்கள் பணக்காரர்களாகவும், ஏழைகள் ஏழைகளாகவும் மாறிக் கொண்டு வருவதை காண முடிகிறது. இந்தியாவில் நிலவுகிற வருமான சமத்துவமின்மை உலகத்திலேயே அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக தென்னாப்பிரிக்கா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடுகிற போது இந்தியாவில் மிக அதிகமாக இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தை விட மோசமான அளவில் வருமான சமத்துவமின்மை அதிகரித்திருப்பதாகவும் கூறியிருக்கிறது.

ஏற்கெனவே இருந்த 271 கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் மட்டும் அந்த பட்டியலில் புதிதாக 94 கோடீஸ்வரர்கள் சேர்ந்திருப்பதாக மனிதவள ஆராய்ச்சி நிறுவனம் 2024 இல் வெளியிட்ட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் குறிப்பிட்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள 10 சதவீத பணக்காரர்கள் 80 சதவீத தேசிய சொத்துகளை அபகரித்திருப்பதாக ஏற்கெனவே ஆக்ஸ்பார்ம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 16 கோடீஸ்வரர்களின் சொத்து மக்கள் தொகையில் 60 கோடி மக்களின் சொத்துக்களுக்கு சமமாக இருப்பதாக அந்த அறிக்கை ஏற்கெனவே கூறியிருந்தது. இதுதான் மோடி ஆட்சியில் நிலவுகிற வருமான சமத்துவமின்மையின் அடையாளமாகும். இதன்மூலம் பாஜக ஆட்சி கடந்த 10 ஆண்டுகளில் யாருக்காக நடைபெற்றது ? எதற்காக நடைபெற்றது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இன்றைய ஆங்கில நாளேட்டில் சர்வதேச பொருளாதார சேவை நிறுவனம் டிசம்பர் 2023இல் வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியை மேலும் அதிகரித்திருக்கிறது. அதன்படி இந்திய குடும்பங்களின் மொத்த கடன் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 40 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருப்பதாக அந்த புள்ளி விவரம் கூறுகிறது. அதேநேரத்தில் மக்களின் சேமிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக குறைந்துள்ளது. மேலே கூறப்பட்ட அனைத்து புள்ளி விவரங்களும் சுதந்திர இந்தியாவில் இதுவரை காணாத அதிர்ச்சி தகவல்களாகும்.

இதன்மூலம் கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் குறிப்பிட்ட கார்ப்பரேட்டுகள் சொத்துக்களை குவிக்க உதவுவதும், அதற்கேற்ப அரசின் கொள்கைகளை முடிவெடுப்பதும், அதன்மூலம் அவர்கள் பெற்ற பலனுக்கு கைமாறாக சட்டத்தின் மூலமாகவே தேர்தல் பத்திர நன்கொடை மூலம் நன்கொடைகளை குவித்ததும், அதன்மூலம் தேர்தல் களத்தில் சாதகமான சூழலை உருவாக்குவதிலும் பிரதமர் மோடி தற்காலிகமாக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், நாட்டு மக்களின் வாழ்வாதாரம் சீரழிக்கப்பட்டு, பொருளாதார பாதிப்பின் காரணமாக பாஜக ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதனடிப்படையில் வருகிற மக்களவை தேர்தலில் பாஜக ஆட்சி அகற்றப்பட்டு இண்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகி வருகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x