Published : 14 Apr 2018 10:12 AM
Last Updated : 14 Apr 2018 10:12 AM

ஜெ. மகள் எனக் கூறி அம்ருதா வழக்கு; ஏப்.19-க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா தொடர்ந்த வழக்கில், ஏப்.19-க்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் நான்தான் என உரிமைக் கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற இளம்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘ஜெயலலிதாவின் உடலை எங்களது குல வழக்கப்படி இறுதிச் சடங்குகளை செய்து அடக்கம் செய்ய வேண்டும். எனவே அவரது உடலை தோண்டியெடுத்து சம்பிரதாயப்படி அடக்கம் செய்ய அனுமதியளிக்க வேண்டும். மேலும் நான்தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

ஆனால் அரசு தரப்பில், ‘‘அம்ருதா, ஜெயலலிதாவின் வாரிசு என்பதற்கு எந்தவொரு சட்டப்படியான ஆதாரங்களும் இல்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் அம்ருதா தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று நீதிபதி எஸ்.வைத்யநாதன் முன்பு நடந்தது. அப்போது அம்ருதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரகாஷ், ‘‘இந்த வழக்கை தமிழக அரசு வேண்டுமென்றே இழுத்தடித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதமே பதில் மனுத்தாக்கல் செய்திருக்க வேண்டும்’’ என குற்றம் சாட்டினார்.

அப்போது அரசு தரப்பில், இந்த வழக்கில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி வாதிடவுள்ளார். தற்சமயம் அவர் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கை வரும் ஏப்.19-க்கு தள்ளிவைத்த நீதிபதி, அதற்குள் தமிழக அரசு இதுதொடர்பாக பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x