Published : 09 Apr 2024 09:53 AM
Last Updated : 09 Apr 2024 09:53 AM

மாற்று அரசியல் சாசனத்தை கொண்டுவர முயற்சி: இந்திய கம்யூனிஸ்ட் புகார்

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா. உடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், தேசிய செயற்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் வகிதா, மாநில குழு உறுப்பினர் சாந்தி உள்ளிட்டோர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இந்தியாவின் எதிர்காலம் இந்தத் தேர்தல் மூலம் தீர்மானிக்கப்பட உள்ளது.

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சி காலத்தில் இந்தியாவின் அரசியல் சாசனச் சட்டம் பெரிய அளவில் கவிழ்க்கப்பட்டு வருகிறது. இப்போது அந்த அரசியல் சாசன சட்டத்தை வீசி எறிந்துவிட்டு, மாற்று அரசியல் சாசனச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று பாஜக தலைவர்கள், ஆர்எஸ்எஸ்-க்கு நெருக்கமான தலைவர்கள் பகிரங்கமாகப் பேசி வருகின்றனர்.

தமிழக முதல்வர் தலைமையில் தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பாசிசம், சர்வாதிகாரத்தை வீழ்த்திட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் எழுப்பியுள்ள குரல் இன்று நாடு முழுவதும் அனைவரையும் தட்டி எழுப்பும் ஒரு குரலாக உள்ளது. பாஜக, ஆர்எஸ்எஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியா ஜனநாயகத்தை இழக்கும், சர்வாதிகார நாடாக மாறும் அச்சுறுத்தல் உள்ளது.

மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளிலும், பாஜக 370 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என பிரதமர் மோடி பேசி வருவது ஒரு வாய்ச்சவடால், மாய்மாலம். இந்திய ஜனநாயகம், அரசியல் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால், வரும் தேர்தலில் பாஜக கூட்டணியை மக்கள் தோற்கடிக்க வேண்டும். பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகத்தில் வந்து கால் வைத்தாலும், காலூன்ற முடியாது.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் ஓராண்டில் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் 20 கோடி வேலை வாய்ப்புகளை அவர் உருவாக்கினாரா? இதுபற்றி பொது வெளியில் விவாதிக்க தயாரா? தேர்தலில் பணம் கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேர்தல் ஆணையம் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.

கேரளாவில் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போட்டியிட்டு வருகிறது. இந்த முறையும் போட்டியிடுகிறது. அதை ஒரு பிரச்சினையாகப் பார்க்கக் கூடாது. இவ்வாறு ராஜா கூறினார். இச்சந்திப்பின்போது, இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், தேசிய செயற்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் வகிதா, மாநிலக் குழு உறுப்பினர் சாந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x