Published : 09 Apr 2024 09:40 AM
Last Updated : 09 Apr 2024 09:40 AM

‘திஹார் சிறை... ராஜ்பவன்...’ - கனிமொழிக்கு தமிழிசையின் கேள்வி

தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ராஜஸ்தான் இளைஞர் அமைப்பினரிடம் நேற்று ஆதரவு திரட்டினார். தி.நகரில் நடந்த ஆதரவு கோரும் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: தென் சென்னை மக்களுக்கு, கண்ணுக்கு தெரியும் எம்.பி வேண்டுமா அல்லது கண்ணுக்கே தெரியாத எம்.பி. வேண்டுமா? கண்ணுக்கு தெரியும் எம்.பி. யாக பார்த்து, பேசி, மக்களோடு மக்களாக இருந்து பணியாற்ற நான் காத்திருக்கிறேன். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை கண்டு திராவிட கட்சிகள் பதற்றமடைந்து கொண்டிருக்கின்றன.

தேர்தலில் போட்டியிடுவதற்கு பாஜகவில் ஆள் இல்லை என்பதால், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வைத்து விட்டு தமிழிசையை பாஜக போட்டியிட வைத்துள்ளது என கனிமொழி கூறியிருக்கிறார். திஹார் சிறையில் இருந்த கனிமொழி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்போது, ராஜ்பவனில் ஆளுநராக இருந்த நான் போட்டியிடக்கூடாதா? திமுகவில் ஆள் இல்லாததால் தான், கனிமொழி, தயாநிதி, உதயநிதி உள்ளிட்ட அவர்கள் குடும்பத்தினரையே தேர்தலில் வேட்பாளர்களாக நிற்க வைக்கிறார்களா? ஜனநாயகம் பாஜகவில் தான் இருக்கிறது.

பாஜகவில் தான் ஒரு தொண்டன் கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ‘‘திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் தமிழக முதல்வர், உதயநிதி, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் திமுகவின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்பது இல்லை.

அதற்கு பதிலாக, ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நான் போட்டியிடுவதை தான் விமர்சிக்கின்றனர். திமுகவால், சாதனையை சொல்லி வாக்கு கேட்க முடியாது. தென் சென்னை எம்.பி.க்கு சாதனை என்று சொல்லி வாக்கு கேட்க எதுவும் கிடையாது.

நான் பிரச்சாரத்துக்கு மட்டும் செல்லவில்லை. தொகுதியில் உள்ள பிரச்சினைகளை குறித்துக் கொள்வதற்கும் செல்கிறேன். நான் தெருவில் நின்று திமுகவுக்கு எதிராக போராடுவேன். திமுகவின் அத்தனை தோல்விகளையும் ஒவ்வொன்றாக வெளியே கொண்டு வருவேன். பிரச்சாரத்தின் போது திமுகவினர் என் பெயரை அதிக முறை உச்சரிக்கிறார்கள். அதுவே என் வெற்றி தான்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x