Last Updated : 09 Apr, 2024 04:10 AM

 

Published : 09 Apr 2024 04:10 AM
Last Updated : 09 Apr 2024 04:10 AM

தேர்தலுக்கு குறுகிய நாட்களே இருப்பதால் கிராமங்களில் ‘ஆடியோ’ வாகன பிரச்சாரம் தீவிரம்

பிரதிநிதித்துவப் படம்

உத்தமபாளையம்: தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ளதால் தேனி தொகுதியின் பல சிற்றூர், மலை கிராமங்களில் வேட்பாளர்களால் பிரச்சாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேட்பாளர்களின் குரல்களை பதிவு செய்து வாகனங்களில் ஒலிக்கச் செய்து பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 16-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. 20-ல் இருந்து 30-ம் தேதி வரை மனுத் தாக்கல், பரிசீலனை, வாபஸ் என்று கட்சியினர் அதில் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இம்முறை கூட்டணி உடன்பாடு, வேட்பாளர் அறிவிப்பு போன்றவற்றிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் பலரும் பிரச்சாரத்தைத் தாமதமாகவே தொடங்கினர். தேனி மக்களவைத் தொகுதிக்குள் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம், மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

பரந்து விரிந்து கிடக்கும் சிற்றூர்கள், மலைப்பகுதி கிராமங்கள் நிறைந்த தொகுதியாக இருக்கிறது. இதனால் குறுகிய காலத்துக்குள் வேட்பாளர்களால் உட்கடை கிராமங்கள் முழுவதும் பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியவில்லை. இன்னும் ஒருவாரத்தில் பிரச்சாரம் முடிய உள்ள நிலையில் வேட்பாளர்களால் பல பகுதிகளுக்கு வாக்கு கேட்டுச் செல்ல முடியவில்லை. தொகுதிக்கு வரும் நட்சத்திரப் பேச்சாளர்களும் மாவட்ட, வட்ட தலைநகர் பகுதிகளிலேயே பிரச்சாரம் செய்கின்றனர்.

இவ்வாறு வரும் விஐபி பேச்சாளர்களுடனே அன்று முழுவதும் வேட்பாளர்கள் செல்லும் நிலை உள்ளது. இது போன்ற பல காரணங்களால் மலைக் கிராம பிரச்சாரங்களை வேட்பாளர்களால் மேற்கொள்ள முடியவில்லை. குறிப்பாக ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள மலைக் கிராமங்களான மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு, வெண்ணியாறு, மகாராசாமெட்டு, போடி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அகமலை, குரங்கணி மற்றும் மாவட்ட எல்லைப் பகுதி சிற்றூர்களில் தேர்தல் பிரச்சாரங்கள் பெரும்பாலும் நடைபெறவில்லை.

மலைக் கிராமங்களுக்குச் சென்று திரும்பினால் ஒருநாள் ஆகி விடும். தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில் இப்பகுதி பிரச்சாரங்களை வேட்பாளர்கள் தவிர்த்து வருகின்றனர். இது போன்ற பகுதிகளை கணக்கெடுத்து வாகன பிரச்சாரம் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. வேட்பாளர்களின் சுய அறிமுகத்துடன் அவரின் குரலை பதிவு செய்து, தான் செய்து தர உள்ள திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள், தான் சார்ந்த கட்சியின் சிறப்பு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச் செய்து வருகின்றனர்.

வேட்பாளர்களும், விஐபி.பேச்சாளர்களும் நேரிடையாக வாக்கு கேட்டு வரும் போது கூட்டமும், ஆரவாரமும் களைகட்டும். அப்போது பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளையும், ஆதங்கங்களையும் நேரடியாக அவர்களிடம் தெரிவிப்பர். ஆனால் இந்தத் தேர்தலில் வேட்பாளர்களையே நேரில் பார்க்காமல் வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கட்சியினர் கூறுகையில், குறுகிய காலமே உள்ளதால் மலை மற்றும் உட்கடை கிராமங்களில் வேட்பாளர்களின் பிரச்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுகட்டவே ஜீப்களில் வேட்பாளர்களின் குரலை ஒலிக்கச் செய்து பிரச்சாரம் செய்து வருகிறோம், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x