Published : 08 Apr 2024 01:06 PM
Last Updated : 08 Apr 2024 01:06 PM

ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக வருமான வரி சிறப்புக் குழு விசாரணை: சத்யபிரத சாஹு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு | கோப்புப் படம்.

சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக வருமான வரி சிறப்புக் குழு விசாரணை நடத்தும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். விசாரணை நடத்தப்பட்டு தேர்தல் செலவினப் பார்வையாளர் விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். சென்னையில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி முடிந்தாலும் கூட ஜூன் 4-ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்த பின்னரும் நடத்தை விதிகள் அமலில் இருக்குமா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். அதற்கான காரணத்தை வினவியபோது, “தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் முடிந்தாலும் கூட கேரளா, கர்நாடகா என அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறவிருப்பதால், அதனைக் கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4 வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்” என்றார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரூ.50,000-க்கு மேலான ரொக்கப் பணம், தங்க நகைகள், பரிசுப் பொருட்கள் என பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னையில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல், உறவினர் வீடுகளில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம், திமுக உள்பட அரசியல் கட்சிகள் பலவும் விசாரணைக்கு வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக வருமான வரி சிறப்புக் குழு விசாரணை நடத்தும் என்று சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

ரூ.208 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்: மேலும், தமிழகத்தில் இதுவரை ரூ.208 மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சத்தியபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இதில் ரூ.88.12 கோடி ரொக்கப் பணம் எனத் தெரிவித்தார். ரூ.4.53 கோடி மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதால் பணம், பொருட்கள், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் இதுவரை 2.08 கோடி பேருக்கு பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான சதி வலை: இதற்கிடையில், இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில பாஜக தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை, “ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான சதி வலை. இவ்விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படட்டும். அதன் பேரில் என்ன நடவடிக்கை எடுத்தாலும் கவலை இல்லை என்றார். மேலும், கோவை தொகுதியில் இம்முறை திமுக தங்கச் சுரங்கத்தையே கொட்டிக் கொடுத்தாலும் மக்கள் பாஜகவை வெற்றி பெறச் செய்வார்கள். நான் 60 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளுடன் வெற்றி பெறுவேன்” என்று கூறியிருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x