Published : 10 Apr 2018 09:55 AM
Last Updated : 10 Apr 2018 09:55 AM

இந்து மதத்தின் தாக்கத்தால் கிறிஸ்தவ மதத்திலும் தீண்டாமை கொடுமை: முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் வேதனை

இந்து மதத்தின் தாக்கத்தால் கிறிஸ்தவத்திலும் தீண்டாமை கொடுமைகள் தொடர்வதாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி து.அரிபரந்தாமன் வேதனை தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மறை மாவட்டத்தில் கடைபிடிக்கப்படும் தலித் கிறிஸ்தவர்கள் மீதான தீண்டாமை குறித்து பொது விசாரணை அறிக்கையை சென்னையில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் நேற்று வெளியிட்டார். கல்வியாளர் வசந்திதேவி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், பொதுச்செயலாளர் கோ.சாமுவேல்ராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆர்.கிருஷ்ணன், எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்டோர் முதல் பிரதியை பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அரிபரந்தாமன் பேசியதாவது:

இந்து மதத்தின் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்ட தலித் மக்கள், கிறிஸ்தவ மதத்தில் இணைந்தனர். ஆனால், அங்கும் அவர்களுக்கு ஜாதியால் வாய்ப்புகள் மறுக்கப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. சிவகங்கை மறை மாவட்டத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் கடந்த 2017 மார்ச் 16-ம் தேதி பொது விசாரணை நடந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த 62 ஆவணங்களுடன் 30 பக்க விரிவான அறிக்கையை தமிழ், ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளோம்.

சிவகங்கை மறை மாவட்டம் உருவாக்கப்பட்ட 30 ஆண்டுகளில், 25 சதவீதம் உள்ள தலித் கிறிஸ்தவர்களான தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் ஒருவருக்குக்கூட குருபட்டம் வழங்கவில்லை. முறையான பயிற்சி பெற்ற பிறகும் குருபட்டம் வழங்கப்படாமல் பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கிறிஸ்தவ மதத்தில் ஜாதி பாகுபாடுகள் இல்லை. ஆனால், இந்து மதத்தின் தாக்கத்தால் அங்கும் தீண்டாமை கொடுமைகள் தொடர்கின்றன. இரட்டை இடுகாடு, இரட்டை தேவாலயம், தேவாலயங்களில் தூய்மைப் பணி, கழிவறைகள் சுத்தம் செய்வது போன்றவற்றை தலித் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்குதல் என கொடுமைகள் நடக்கின்றன.

இந்துத்துவத்தால் இந்தியா இன்று மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த அறிக்கை அவர்களுக்கு சாதகமாகிவிடும் என சிலர் அச்சம் தெரிவித்தனர்.

இவ்விசாரணை அறிக்கை கிறிஸ்தவ மதத்துக்கு எதிரானது அல்ல. கிறிஸ்தவத்தில் உள்ள ஜாதி தீண்டாமை அறவே ஒழிய வேண்டும் என்பது மட்டுமே எங்களின் நோக்கம். இதை புரிந்துகொண்டு கிறிஸ்தவத்தில் தீண்டாமை கொடுமையை ஒழிக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அரிபரந்தாமன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x