Published : 06 Apr 2024 02:05 PM
Last Updated : 06 Apr 2024 02:05 PM

திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் இன்று (சனிக்கிழமை) காலை 10.35 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவை ஒட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: “விழுப்புரம் தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான என்.புகழேந்தி உடல்நலக் குறைவால் இன்று காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.

அவர் எங்களுடன் சட்டப்பேரவை கூட்டங்களில் கலந்து கொண்டதையும், அவருடன் பழகிய காலங்களை எண்ணி பார்க்கிறேன். அவரது பேச்சுகளும், மக்கள் சேவைகளும் இன்றும் எனது நினைவில் நீங்கா இடம் பெற்று நிற்கின்றன.

என்.புகழேந்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்ற கழக தலைவர் மற்றும் திமு.க. நண்பர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் வேதனையோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: “விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான நா. புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

இளம் வயதிலிருந்தே திமுகவில் இணைந்து மாவட்ட செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர் ஆகிய பதவிகளை வகிக்கும் அளவுக்கு உயர்ந்த புகழேந்தி, அனைவரிடத்திலும் நன்றாக பழகக்கூடியவர். என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த புகழேந்தி நலம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது மறைவு அதிர்ச்சியளிக்கிறது.

நா.புகழேந்தியை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், விழுப்புரம் மாவட்ட திமுகவினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருநாவுக்கரசர்: ”விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து மனம் மிக வருந்துகிறேன்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து வந்த நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெருந் துயரத்திற்குரியது. இவரது மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும். புகழேந்தி விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி வந்தவர். சிறந்த பண்பாளர்.

அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனது தந்தையை இழந்து வாடும் அவரது மகன் புகழ் செல்வக்குமாருக்கும், அவரது குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி மக்களுக்கும், தி,மு.க தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: “திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான புகழேந்தி நேற்று இரவு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.புகழேந்தியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என வைகோ தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x