Last Updated : 06 Apr, 2024 11:48 AM

10  

Published : 06 Apr 2024 11:48 AM
Last Updated : 06 Apr 2024 11:48 AM

“யார் ஆட்சிக்கு வந்தாலும் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்” - ப.சிதம்பரம் நேர்காணல்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் | படம்: ம.பிரபு

இந்தியாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும், 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறினார். அவர் `இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:

தமிழக தேர்தல் களம் எப்படி உள்ளது? - 2019-ல் திமுக தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வென்றது. அந்த கூட்டணி தற்போது இண்டியா கூட்டணியாக மேலும் வலிமை அடைந்திருக்கிறது.

2009-ல் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் கட்சியால் 2014-ல் 44, 2019-ல் 52 என்று 100-க்கும் குறைவான தொகுதிகளிலேயே வெற்றி பெற முடிந்தது. இந்நிலையில், 2024 தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியால் தனித்து 100 இடங்களைக்கூட பெற முடியாது என்ற கணிப்புகள் பற்றி உங்கள் கருத்து என்ன?

2019 தேர்தலில் பூஜ்யம் அல்லது ஒன்று என்று கிடைத்த பல மாநிலங்களில் இந்த முறை கணிசமான முன்னேற்றம் இருக்கும். உதாரணத்துக்கு, 2019-ல் தெலங்கானாவில் 3, கர்நாடகத்தில் 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இந்த மாநிலங்களிலெல்லாம் நிச்சயம் தற்போது அதிக இடங்கள் கிடைக்கும்.

கடந்த 2 தேர்தல்களில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பிஹார் போன்ற இந்தி பேசும் பெரிய மாநிலங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியே காங்கிரஸ் கட்சியால் 100 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாத நிலையை உருவாக்கியது. இப்போது அந்த மாநிலங்களில் நிலைமை எப்படி உள்ளது?

2019 தேர்தலில் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி எதுவும் இல்லை. இப்போது சமாஜ்வாதி கட்சியுடன் சேர்ந்து வலுவான கூட்டணி உருவாகியுள்ளது. பிஹார் மாநிலத்திலும் பலமான கூட்டணி அமைத்திருக்கிறோம். மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கடந்த முறை பூஜ்யம் அல்லது ஒன்று என்ற அளவிலேயே வெற்றி கிடைத்தது. பூஜ்யத்துக்கு கீழே செல்ல இனி எதுவும் இல்லை. 2019 தேர்தல் முடிவுகளே 2024 தேர்தலிலும் வரும் என்பது தவறானது. அந்த மாநிலங்களில் எல்லாம் இம்முறை எங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும்.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளை அனுசரித்துப் போகாத காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையால் இண்டியா கூட்டணியில் தொடக்கத்தில் இருந்த நம்பிக்கை நீங்கி, மனச்சோர்வு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படும் விமர்சனம் பற்றி…?

காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையை மட்டும் குறை கூறுவது சரியல்ல. கூட்டணியை உருவாக்குவதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சமமான பொறுப்பு உள்ளது. தேர்தல்களில் கூட்டணியை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பாஜககூட தமிழ்நாட்டில் அதிமுகவுடனும், ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்துடனும் கூட்டணி அமைக்க எவ்வளவோ முயற்சி மேற்கொண்டது. அது முடியவில்லை. வெற்றிகரமான கூட்டணிகள் அமைவது அந்தந்த காலகட்டம் மற்றும் அந்தந்த மாநில அரசியல் சூழ்நிலைகளைப் பொறுத்தது.

பாஜக 3-வது முறையாக ஆட்சியமைத்தால், உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று பிரதமர் மோடி பேசி வருகிறாரே?

மோடி பிரதமராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த ஆட்சி இருந்தாலும் அல்லது வேறு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் 142 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு நாடு, நிச்சயமாக 3-வது இடத்துக்கு முன்னேறும். 2004-ல் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றபோது உலக பொருளாதாரத்தில் 12-வது இடத்தில் இருந்த இந்தியா, 2014-ல் நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகியபோது 7-வது இடத்துக்கு முன்னேறியது. பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 7-வது இடத்திலிருந்து 5-வது இடத்துக்கு உயர்ந்திருக்கிறது. அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும், 4 சதவீதம் என்ற குறைந்தபட்ச வளர்ச்சி விகிதம் இருந்தால்கூட இந்தியா 5-வது இடத்திலிருந்து 3-வது இடத்துக்கு உயரும். இதையெல்லாம் தங்களின் சாதனையாக பாஜகவினர் கூறுவது அபத்தமானது.

தமிழகத்தில் திமுக, அதிமுகவைத் தவிர்த்து பாஜக தலைமையில் அமைந்துள்ள 3-வது அணி தேர்தல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறதே?

பாஜக கூட்டணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் மிகப் பெரும்பான்மையான இடங்களில் பாஜக கூட்டணி 3-வது இடத்தைத்தான் பிடிக்க முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x