Published : 13 Apr 2018 07:49 AM
Last Updated : 13 Apr 2018 07:49 AM

தமிழகம், உத்தரப் பிரதேசத்தில் ராணுவ தொழில் வழித்தடம் ஏற்படுத்த திட்டம்: ராணுவ கண்காட்சி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தகவல்

தமிழகம், உத்தரப்பிரதேசத்தில் ராணுவ தொழில்வழித் தடத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ராணுவ தளவாடக் கண்காட்சி (டெபெக்ஸ்போ - 2018) இந்த ஆண்டு சென்னை அருகே உள்ள திருவிடந்தையில் நேற்று முன்தினம் தொடங்கியது. ரூ.800 கோடி செலவில் 2 லட்சத்து 90 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியில் 539 இந்திய நிறுவனங்களும் 162 வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களது தளவாட உற்பத்திகளை காட்சிப்படுத்தியுள்ளன. 47 நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முறைப் படி தொடங்கி வைத்து பார்வையிட்டார். விழாவில் அவர் பேசியதாவது:

தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த காஞ்சிபுரம் பகுதியில் இந்திய ராணுவக் கண்காட்சி நடப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வர்த்தகம், கல்வி மூலம் வரலாற்று நாகரிகத்தை உருவாக்கிய சோழர்கள், பல்லவர்கள் வாழ்ந்த மண்ணில் நிற் பது பெருமை அளிக்கிறது. இக்கண்காட்சியின் மூலம், இந்திய ராணுவ தேவைக்கு வேண் டிய தளவாடங்கள் குறித்து விவாதிக்கவும், நமது நாட்டு ராணுவ வலிமையை மற்ற நாடுகளுக்கு பறைசாற்றவும் வழிவகை ஏற்படும்.

போரினால் பிற நாடுகளை வெல்வதைவிட அந்த நாட்டு மக்களின் மனங்களை வெல்வதுதான் முக்கியம் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். நமது இந்தியா வேறு எந்த ஒரு நாட்டின் எல்லையையும் விரும்பியது இல்லை. வேத காலத்தில் இருந்தே உலக சகோதரத்துவம், அமைதியை மற்ற நாடுகளுக்கும் பரவச் செய்த நாடு இந்தியா.

நமது மண்ணில்தான் புத்த மதம் தோன்றி அது உலகம் முழுவதும் பரவியது. அசோகர் காலத்திலும் அதற்கு முன்பும் மனிதத்துவத்துக்கான உயர்ந்த நெறிகளை காப்பதே பிரதானம் என நம் முன்னோர்கள் எண்ணிச் செயல்பட்டனர். கடந்த நூற்றாண்டில் உலகப் போர்களின்போது, இந்தியாவைச் சேர்ந்த 1.30 லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் தங்களது உயிரை தியாகம் செய்தனர். உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஐக்கிய நாடுகளின் சார்பில் அமைதி தூதுவர்களாக நமது வீரர்கள் அனுப்பப்பட்டனர். அங்குள்ள மக்களின் நலன்களைப் பேணுவதே அவர்களது குறிக்கோளாக இருந்தது.

ராணுவ தளவாட உற்பத்தியில் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறையை அதிகளவு பயன்படுத்தும் நோக்கத்தில் அதற்கான கொள்முதல் கொள்கை கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு மே வரையிலான காலத்தில் ராணுவ தளவாட உற்பத்திக்காக வழங்கப்பட்ட உரிமங்களின் எண்ணிக்கை 215 ஆக மட்டுமே இருந்தது.

ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 144-க்கும் அதிகமான உரிமங்கள் வழங்கப்பட் டுள்ளன.

தமிழகம், உத்தரப்பிரதேசத் தில் ராணுவ தொழில்வழித் தடத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ராணுவ தளவாட உற்பத்திக்கான தளமாக விளங்கும். இதுதவிர ராணுவ முதலீட்டாளர்கள் உதவி மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.

விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர்கள் சுபாஷ் பாம்ரே, பொன்.ராதாகிருஷ்ணன், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முப்படை சாகசங்களை பார்வையிட்ட பிரதமர்

திருவிடந்தையில் ராணுவக் கண்காட்சியை நேற்று முறைப்படி தொடங்கி வைத்த பிரதமர் மோடி, முப்படைகளின் பிரம்மாண்ட சாகங்களையும் பார்வையிட்டார். சாகச நிகழ்ச்சியில் முதலாவதாக, 6,000 அடி உயரத்தில் பறந்த டார்னியா் விமானத்தில் இருந்து விமானப் படை கமாண்டோ வீரா்கள் 8 பேர் பாராசூட் மூலம் குதித்து சாகசம் செய்தனர். அதில் ஒரு வீரர் தேசியக் கொடியை ஏந்தியபடி தரையிறங்கினார்.

இதைத் தொடா்ந்து, ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் 2 எச்.ஏ.எல். ரகம் மற்றும் சேட்டக், வேப் ரக ஹெலிகாப்டர்கள் பங்கேற்று சாகசம் செய்தன. அடுத்ததாக, 4 சைலன்ட் வகை, புகையைக் கக்கிச் செல்லும் நவீன ரக 9 விமானங்கள் உட்பட 15 ஹெலிகாப்டா்களில் விமானப் படை வீரா்கள் வானில் வட்டமிட்டபடி சாகச நிகழ்ச்சிகளை செய்துகாட்டினர்.

இதையடுத்து, கடற்படையின் ஐஎன்எஸ் சுமித்ரா, சஹயாத்திரி, கமோர்தா, குக்ரி ஆகிய 4 போர்க் கப்பல்கள் வங்கக்கடலில் குறிப்பிட்ட தொலைவில் வைக்கப்பட்டிருந்த இலக்கை நோக்கி துல்லியமாக குண்டு வீசி தாக்கி அழிக்கும் சாகச நிகழ்ச்சியை செய்துகாட்டின. கடற்கொள்ளையர்களை எந்திரத் துப்பாக்கிகளால் சுட்டு வீழ்த்தும் நிகழ்ச்சியையும் செய்துகாட்டினர்.

தொடா்ந்து, 3 டார்னியா் ரக கண்காணிப்பு விமானங்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆவடியில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் மார்க்-1, மார்க்-2 ரக பீரங்கி வண்டிகளில் ராணுவ வீரர்கள் மணல் பரப்பில் பாய்ந்து வந்து சாகசங்கள் செய்தனா். இதில், 10 நிமிடத்தில் 20 அடி நீளம் பாலம் அமைக்கும் பீரங்கி வண்டிகள், 600 குதிரைத் திறன் கொண்ட பீரங்கி வண்டிகள், கமாண்டோ கன்ட்ரோல் ரக பீரங்கி வண்டிகளில் வீரர்கள் சாகசங்கள் செய்துகாட்டினர். அப்போது, மணல் பரப்பில் புழுதி பரப்பியபடி பீரங்கிகள் சாகசங்களில் ஈடுபட்டதால் அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x