Published : 05 Apr 2024 08:27 AM
Last Updated : 05 Apr 2024 08:27 AM

காஞ்சிபுரம் தொகுதியில் திமுக, அதிமுக, பாமக இடையே மும்முனைப் போட்டி

படங்கள்: எம்.முத்துகணேஷ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக, பாமக இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு ஈடு கொடுத்து நாம் தமிழர் கட்சியினரும் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 6-வது தொகுதியாகும். இந்தத் தொகுதிபட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தனித் தொகுதி. கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறு சீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.

செங்கல்பட்டு மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், உத்திரமேரூர்,காஞ்சிபுரம் ஆகியவை இந்தத் தொகுதியில் இணைக்கப்பட்டன. தற்போது இந்த மக்களவைத் தொகுதியில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் ஆகிய6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. மொத்தம் 17லட்சத்து 48 ஆயிரத்து 866 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்தத் தொகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பெ.விஸ்வநாதன் வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2014-ம் ஆண்டுதேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் வெற்றிபெற்றார். 2019-ம் ஆண்டு தேர்தலில் தற்போதைய மக்களவை உறுப்பினர் க.செல்வம் வெற்றி பெற்றுள்ளார்.

க.செல்வம் (திமுக) - திமுக சார்பில் கடந்த முறை வெற்றி பெற்ற க.செல்வம் மீண்டும்போட்டியிடுகிறார். திமுக அரசின்சாதனைகள் மற்றும் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்யப்பட்ட பணிகள் ஆகியவற்றை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார். திமுகவின் பிரச்சாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக மீதான விமர்சனமும், அதிமுக மீதான விமர்சனமும் அதிகம் உள்ளது.

காஞ்சி மக்களவைத் தொகுதி உத்திரமேரூர் பகுதியில்
வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் க.செல்வம்.

மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான நிதியை தருவதில்லை என்ற குற்றச்சாட்டை அவ்வப்போது முன் வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவருக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்துள்ளார்.

கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களும் இவருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அளவுக்கு மக்கள் பிரச்சினைகளில் இவர் போதிய கவனம்செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பல்வேறு கட்சிகளால் எழுப்பப்படுகிறது.

எ.ராஜசேகர் (அதிமுக) - அதிமுக சார்பில் எ.ராஜசேகருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள் ளது. இவர் காஞ்சிபுரம் பகுதிகளில் அதிக அறிமுகம் இல்லை என்றாலும், செங்கல்பட்டு மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் அதிமுகவில் முக்கியமான ஒருவர். பெரும்பாக்கம் பகுதியில் இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 40 ஆண்டுகளாக ஊராட்சி தலைவராக இருந்து வந்துள்ளனர். இவர் திமுக அரசின் குறைகளை பெரும்பாலும் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

மாமல்லபுரம் பகுதியில் வாக் குச் சேகரிப்பில்
ஈடுபட்ட அதிமுக வேட்பாள ர் ராஜசேகர்.

இவருக்கு ஆதரவாக தேமுதிகவினரும் களப்பணி செய்துவருகின்றனர். தேமுதிக தலைவர்பிரேமலதா பிரச்சாரம் செய்துள்ளார். காஞ்சிபுரத்தில் முக்கிய பிரச்சினையான செங்கல்பட்டு-அரக்கோணம் இரட்டை ரயில் பாதை, செய்யூர் அனல்மின் நிலையப் பிரச்சினை, மீனவர் பிரச்சினை போன்றவற்றில் தற்போதைய மக்களவை உறுப்பினர் க.செல்வத்தின் செயல்பாடு சரியில்லை என்பதை கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

ஜோதி வெங்கடேசன் (பாமக) - ஜோதி வெங்கடேசன் பாமகவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முதலில் சிதம்பரம் தொகுதியில்தான் பாமக போட்டியிடுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் இந்தத் தொகுதி பாஜக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் வேட்பாளர் அறிவிப்பு இந்தத் தொகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு கடைசியாக அறிவிக்கப்பட்டது.

இவர் திமுக -அதிமுக அரசின் குறைகளை எடுத்துக் கூறியும், இந்த தேர்தல் மக்களவைத் தேர்தல் என்பதால் யார் பிரதமர் என்பதுமுக்கியம் என்பதை முன்னிறுத்தியும் வாக்குகளை சேகரித்து வருகிறார்.

மண்ணிவாக்கம் பகுதியில் பாமக வேட்பாளர்
ஜோதி வெங்கடேசன் தேர்தல் பிரச்சாரம்.

இவருக்காக பாமக நிறுவனர்ராமதாஸ், பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக, அதிமுக என இரு கட்சிகள் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் இவர்களின் யுக்தியால் முக்கிய போட்டியாளர் வரிசையில் இவரும் இடம் பெறுகிறார்.

வி.சந்தோஷ்குமார் (நாம் தமிழர்) - நாம் தமிழர் கட்சி வேட்பாளராக வி.சந்தோஷ்குமார் களத்தில் இறக்கப்பட்டுள்ளார். திமுக-அதிமுக-பாமக என முக்கிய போட்டியாளர்களுக்கு மத்தியில் நாம் தமிழர் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும், மத்தியில் ஆளும் பாஜகவையும் எதிர்த்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மக்களவைத் தேர்தலில் இந்தக் கட்சி 62 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. இந்தக் கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது.

செய்யூர் பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.சந்தோஷ்குமார்.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் முக்கிய தலைவர்களும் இந்தத் தொகுதிக்கு படையெடுக்க உள்ளனர். கடைசி நேர தேர்தல்யுக்தியில் யார் முன்செல்கி றார்கள் என்பதை அரசியல் நோக்குநர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x