Published : 05 Apr 2024 05:18 AM
Last Updated : 05 Apr 2024 05:18 AM

நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி மீது புகார்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக மனு

சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படும் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் அதிமுக சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை நேற்று சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘‘மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர்உரிமை திட்டத்தில் 1.60 கோடி பேர் விண்ணப்பித்ததில், 1.16 கோடி பேர் தற்போது பயனாளிகளாக உள்ளனர்’’ என்று பேசினார்.

உரிமைத் தொகை: அப்போது அங்கிருந்த பெண்கள், ‘‘நாங்கள் இத்திட்டத்தில் பயன்பெற இயலவில்லை’’ என்று கூறி கேள்வி எழுப்பினர். அதற்கு உதயநிதி, ‘‘யாருக்கு ரூ.1,000 கிடைக்காவிட்டாலும், அரசு மூலம் அந்த தொகையை பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும்’’ என்று உறுதியளித்தார்.

தேர்தல் நடத்தை விதிகளின்படி, நிதி தொடர்பாக எந்த வாக்குறுதியும் அளிக்க கூடாது. ஆனால், அவர் சார்ந்த கட்சிக்கு எதிரான நிலை இருப்பதால், ரூ.1,000 உரிமை தொகை கிடைக்காத பெண்களுக்கு அத்தொகை கிடைக்க ஏற்பாடு செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்துள்ளார். இது தேர்தல் நடத்தை விதிமீறல்.

முன்னதாக, கடந்த மார்ச் 31-ம்தேதி கட்சியினர் இடையேவெறுப்பை தூண்டும் விதமாகபேசியது தொடர்பாக உதயநிதிமீது ஏற்கெனவே புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, நடத்தை விதிகளை மீறி செயல்படும் அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முறையான சோதனை இல்லை: அதிமுக சட்டப் பிரிவு இணைசெயலாளர் பாபு முருகவேல்அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

அரசு இயந்திரத்தை தனக்குசாதகமாகவும், அரசு அலுவலர்களை கைப்பாவையாகவும் திமுக அரசு தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களின் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்படுவது இல்லை.

கடந்த 2 நாட்கள் முன்பு திமுக தலைமை அலுவலகத்தில், மக்களவை தேர்தல் பணி அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது, உயர் நீதின்ற அரசு கூடுதல் வழக்கறிஞர்கள், திமுக தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பதுபோல புகைப்படம் வெளியானது. இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல்.

அரசு வழக்கறிஞர்கள், அரசுக்குதான் பணி செய்ய வேண்டுமே தவிர, ஆளும்கட்சிக்காக அல்ல. எனவே, அரசு வழக்கறிஞரை தங்கள் கட்சியின் லாபத்துக்காக பயன்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x