Published : 04 Apr 2018 10:42 AM
Last Updated : 04 Apr 2018 10:42 AM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு போராட்டம்: காஞ்சி மாவட்டத்தில் 75% கடைகள் அடைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தால் 75% கடைகள் மூடப்பட்டிருந்தன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஆளுங்கட்சியான அதிமுக, திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அதன் தலைவர் விக்கிரமராஜா அறிவித்திருந்தார். இதில், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம், ஹோட்டல்கள் சங்கம் உள்ளிட்ட 58 அமைப்புகள் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, தமிழகம் முழுவதும் கடையடைப்புப் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர், படப்பை, செங்கல்பட்டு, மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் 25% கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. எனினும், மருந்து வணிகர்கள் முழுமையாக கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். மாலை 6 மணிக்கு மேல் கடைகள் வழக்கம்போல் செயல்படத் தொடங்கின.

மாமல்லபுரம்

சர்வதேச சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் வியாபாரிகள் முழு அளவில் போராட்டத்தில் பங்கேற்றிருந்ததால் 75% கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால், பெரும்பாலான உணவகங்கள் மற்றும் விடுதிகள் வழக்கம்போல் செயல்பட்டன.

இதேபோல், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மதுராந்தகம், செய்யூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முழு அளவில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. எனினும், சிறு வியாபாரிகள் வழக்கம்போல் வியாபாரத்தை மேற்கொண்டனர்.

இதுகுறித்து, புதுப்பட்டினம் வணிகர் சங்க பேரமைப்பு துணைத் தலைவர் அப்துல் உசேன் கூறியதாவது: ‘‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக விவசாயிகளை ஏமாற்றும் மத்திய அரசைக் கண்டித்தும், மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். விவசாயிகளின் நலனுக்காக கல்பாக்கத்தில் அனைத்து வியாபாரிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர்’’ என்றார்.

வியாபாரிகள் குமுறல்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தில் வியாபாரிகள் பங்கேற்ற நிலையில், வரும் 5-ம் தேதி (நாளை) நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டத்திலும் பங்கேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் வியாபாரிகளை வலியுறுத்தியுள்ளனர். அடுத்தடுத்து கடையடைப்பு போராட்டம் நடத்துவது வியாபாரிகளைப் பாதிக்கிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களையே கடைகளில் பெரும்பாலும் விற்பனை செய்கிறோம். அதனால், விவசாயிகளுக்கு ஆதரவாக வியாபாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்காமல் அணிகளாய் பிரிந்து போராட்டம் செய்வது வேதனையளிப்பதாக வியாபாரிகள் சிலர் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருவள்ளூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் மாலை வரை கடைகள் அடைக்கப்பட்டன.

திருத்தணி ம.பொ.சி சாலை, அரக்கோணம் சாலை, சித்தூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆர்.கே. பேட்டை பகுதிகளில் 40 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்தன.

திருவள்ளூர் பஜார் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கடைகளும், பூந்தமல்லி பகுதியில், கரையான்சாவடி, குமணன்சாவடி உள்ளிட்ட இடங்களில் 400-க்கும் மேற்பட்ட கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் உள்ள கடைகளில் 40 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x