Last Updated : 04 Apr, 2024 02:28 PM

1  

Published : 04 Apr 2024 02:28 PM
Last Updated : 04 Apr 2024 02:28 PM

தேனி தொகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகள் - மக்களின் அதிருப்தியும் பின்புலமும்

முல்லை பெரியாறு அணை

ஆண்டிபட்டி: பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துதல், வைகை அணையை தூர்வாருதல் உள்ளிட்ட பல திட்டங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதியாக அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இவை நிறைவேற்றப்படுவதில்லை. தற்போதைய தேர்தலிலும் இதே வாக்குறுதிகள் கூறப்படுவதால் வாக்காளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் போடி, பெரியகுளம் பகுதிகளில் மா பதப்படுத்தும் கிட்டங்கி, மாம்பழ சாறு தொழிற்சாலை உள்ளிட்டவற்றை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்கள் இது குறித்து வாக்குறுதி அளித்து வருகின்றனர். இருப்பினும் யாரும் இதுவரை நிறைவேற்றவில்லை.

இதேபோல் முல்லை பெரியாற்றின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துதல், வைகை அணையை தூர்வாருதல், கண்ணகி கோயில் செல்வ தற்கான பாதையை அமைத்தல், திண்டுக்கல் - சபரிமலை ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் காலங்காலமாக இருந்து வருகின்றன.

ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்கள் இதனைக் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். இருப்பினும் இக்கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே உள்ளன. இத்தேர்தலிலும் இந்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் தொகுதி மக்கள் சலிப்படைந்து உள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறியிதாவது: வெற்றி பெற்றதும் தங்களுக்கு சார்பான ஆட்சி மத்தியில் இல்லை. அதனால் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என்கிறார்கள். மத்தியில் கூட்டணி ஆட்சி இருந்தாலும் கூட இத்திட்டங்களை எம்.பி.க்கள் செய்து தருவதில்லை.

மதுரை - தேனி ரயிலை பொதுமக்களே போராடி 12 ஆண்டுகளுக்குப் பின்பு கொண்டு வந்திருக்கிறோம். பகலில் அந்த ரயிலை இயக்காமல் வெறுமனே நிறுத்தி வைத்துள்ளனர். எளிதாக செய்யும் காரியங்களைக் கூட எம்.பி.க்கள் செய்து தருவதில்லை. இதனால் தொகுதி வளர்ச்சியின்றி உள்ளது. தொலைநோக்கு திட்டங்களுக்காக நாங்கள் பல காலமாக காத்துக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கட்சியினர் கூறுகையில், இத்தொகுதியில் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மையாக மத்தியில் ஆட்சியை பிடித்தால் இது போன்ற பெருந்திட்டங்களை செயல்படுத்த முடியும். இருந்தும் சில நேரங்களில் கட்சி தலைமை ஆர்வம் காட்டுவதில்லை. முல்லை பெரியாறு அணை நீர்மட்ட உயர்வு இரு மாநிலம் சம்பந்தப்பட்டது. நீதிமன்ற வழக்குகள் உள்ளன. இருப்பினும், திட்டங்களை தொடர்ந்து வலியுறுத்தி நிறைவேற்ற வாய்ப்புகள் உள்ளன என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x