Published : 04 Apr 2024 10:19 AM
Last Updated : 04 Apr 2024 10:19 AM

‘ஸ்டார் தொகுதி’ நீலகிரி நிலவரம் என்ன? - ஒரு பார்வை

எல்.முருகன், ஆ.ராசா, லோகேஷ் தமிழ்செல்வன், ஆர்.ஜெயகுமார்

சமவெளியும், மலைப்பிரதேசமும் கலந்த தொகுதியாக உள்ளது நீலகிரி மக்களவைத் தொகுதி. தனித் தொகுதியான இங்கு பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், ஆகியோர் போட்டியிடுவதால் இத்தொகுதி தனிக்கவனம் பெற்று விஐபி தொகுதியாக மாறியுள்ளது.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகமண்டலத்தைக் கொண்டது நீலகிரி மக்களவைத் தொகுதி. உதகை, குன்னூர், கூடலூர்(தனி), மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர்(தனி) ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதி இது. இதில், கடந்தசட்டப்பேரவைத் தேர்தலில் உதகையில் காங்கிரஸ் கட்சியின் ஆர்.கணேஷ், குன்னூரில் திமுகவின் கா.ராமச்சந்திரன், கூடலூரில் அதிமுகவின் பொன்.ஜெயசீலன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மேட்டுப்பாளையம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.செல்வராஜ், அவினாசியில் முன்னாள் சபாநாயகரான அதிமுகவின் தனபால், பவானிசாகரில் அதிமுகவின் பண்ணாரி ஆகியோர் வெற்றி பெற்றனர். மலைப்பகுதியைச் சேர்ந்த தொகுதிகளும் சமவெளிப் பகுதிகளை சேர்ந்த தொகுதிகளும் வெவ்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள் அதிகம். விவசாயிகளில் 50% பேர் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மலை காய்கறி விவசாயமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுற்றுலாத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சிறு, குறு விவசாயிகளும் இங்கு உள்ளனர். நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை தேயிலை தொழிற்சாலைகளை தவிர வேறு தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. இருந்த ஒரே ஒரு பொதுத் துறை நிறுவனமான ‘இந்துஸ்தான் போட்டோ பிலிம்’ தொழிற்சாலையும் மூடப்பட்டுவிட்டது.

இளைஞர்களில் 80% பேர் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் பணியாற்றி வருகின்றனர். மலை மாவட்டத்தில் சுற்றுலாத் தொழிலை பொறுத்தவரை ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டுமே வருமானம் கிடைக்கும்.

கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பிரிவு 17 நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது.தனியார் வன பாதுகாப்புச் சட்டம் போன்றவை மக்களை கடும் சிரமத்துக்குள்ளாக்குகின்றன. அரசு பொறியியல் கல்லூரி இல்லை. மேட்டுப்பாளையம், பவானிசாகரில் போதிய நீர் பாசன வசதிகள் இல்லை. அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வராத நிலையில், குடிநீர்த் தட்டுப்பாடு மக்களை வதைக்கிறது.

சாயப்பட்டறை கழிவுகளின் பாதிப்புகள் அதிகம். அவிநாசி தொகுதியில் நெசவுத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாகப் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.30 ஆதார விலை வழங்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை.

மாற்றுத் தொழிலாக அரசு முன்வைத்த மலர் சாகுபடித் தொழிலுக்கு, ஏற்றுமதி மையம், பதப்படுத்தும் மையம் அமைக்க வேண்டும். உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை வட மாநிலத்துக்கு இடமாற்றும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வெளியூர் வேட்பாளர்கள் நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ளூர் வேட்பாளர்களைக் காட்டிலும் வெளியூர் வேட்பாளர்களே அதிக முறை வென்றுள்ளனர். 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 தொகுதிகள் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய சமவெளி மாவட்டங்களுக்கு உட்பட்டவை.

இந்த 3 தொகுதிகளில் 60% வாக்காளர்கள் உள்ளனர். வெற்றியைத் தீர்மானிக்கும்சக்தியாக சமவெளிப்பகுதி இருப்பதால், வெளியூர் வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர். வெற்றிவாய்ப்பும் அவர்களுக்கே கிடைக்கிறது. நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். பாஜக வேட்பாளர் எல்.முருகன் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச் செல்வன் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் தான் அதிகம். 7 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 1967-ல் சுதந்திரா கட்சி, 1971, 2009, 2019 ஆகிய ஆண்டுகளில் திமுக, 1977, 2014 ஆகிய ஆண்டுகளில் அதிமுக வென்றிருக்கின்றன. இரு முறை பாஜக வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸின் ஆர்.பிரபு 5 முறை வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். திமுகவின் ஆ.ராசா மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

பாஜகவின் மாஸ்டர் மாதனும் மத்திய இணை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கடந்த ஓராண்டுக்கு முன்னரே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார். பிரதமர் மோடியிடம் எல்.முருகனுக்கு இருக்கும் செல்வாக்கு காரணமாக பாஜகவினர் உற்சாகமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

படுகர் மக்கள் மத்தியில் பாஜகவுக்கு கணிசமான செல்வாக்கு இருப்பதாக அக்கட்சியினர் நம்புகின்றனர். இவற்றோடு அதிருப்தி வாக்குகளும் தங்களுக்கு வரும் என பாஜகவினர் தெரிவிக்கின்றனர். கூடலூர் தொகுதியில் அனைத்து கட்சிகளும் சம பலத்துடன் மோதுகின்றன. உதகை மற்றும் குன்னூர் பேரவை தொகுதி பகுதிகள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

சமவெளிப் பகுதிகளான மேட்டுப்பாளையம், அவிநாசி தொகுதிகளில் அதிமுக பலம் பொருந்தி காணப்படுகிறது. பவானிசாகரில் திமுகவின் கை ஓங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சியினரும் தங்களது வேட்பாளர் ஆர்.ஜெயகுமாருக்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். தற்போதைய நிலையில், நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x