Last Updated : 11 Aug, 2014 07:00 PM

 

Published : 11 Aug 2014 07:00 PM
Last Updated : 11 Aug 2014 07:00 PM

முதியோர் உதவித்தொகை பயனாளிகள் பட்டியலில் மோசடி: 100 சதவீத கள ஆய்வு நடத்தும் வருவாய்த்துறை

தமிழகத்தில் முதியோர் உதவித் தொகை பெறும் பயனாளிகள் பட்டியலில் பெரும் மோசடிகள் நடந்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் பயனாளிகள் பட்டியல் குறித்து, வருவாய்த்துறை மூலம் மாநிலம் முழுவதும் 100 சதவீத கள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

தகுதியில்லாத பயனாளிகள் பெயர்களை, சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் வைத்து நீக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் 20 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள 60 வயதைத் தாண்டிய முதியோர், சொந்த வீடு, நிலம் இல்லாத முதியோர், வருமானம் ஈட்ட முடியாத நிலையில் உள்ள முதியோர், ஆண் வாரிசுகள் இல்லாத முதியவர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதி பெற்றவர்கள்.

குறிப்பிட்ட தகுதியுடைய முதியோர், கிராம நிர்வாக அலுவலரின் சான்று பெற்று வட்டாட்சியர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். கடந்த திமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகையாக மாதம் ரூ. 500 வழங்கப்பட்டு வந்தது. அதிமுக ஆட்சி பொறுப்பேற்றபிறகு உதவித் தொகை ரூபாய் ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

இத்திட்டத்துக்காக மாநில அரசு மாதந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் ஓதுக்கீடு செய்து வருகிறது. ஆனால், இத்திட்டத்தை சிலர் தவறான முறையில் பயன்படுத்துவதும், தகுதியில்லாத நபர்கள் ஏராளமானோர் முதியோர் உதவித்தொகை பெற்று வருவதும், இதனால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. அதையடுத்து, 32 மாவட்டங்களிலும் முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் பட்டியலை நூறு சதவீத கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வருவாய்த்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு கிராமத்திலும் முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களின் நிலை குறித்தும், அவர்களுக்கு வரும் வருமானம், சொத்துகள் குறித்த தகவல்களை வருவாய் ஆய்வாளர்கள் சேகரித்து வருகின்றனர். மேலும், சேகரித்த தகவல்களை குறிப்பிட்ட விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, அதில் பயனாளிகளின் கையெழுத்தை பெற்று வந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கவும் உத்தரவிடப்பட்டது.

அதன்பின்னர், முதியோர் உதவித்தொகை பெற தகுதியில்லாத பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப் பட்டு, அக்குறிப்பிட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு துணை ஆட்சியர் நிலையிலுள்ள அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி உண்மை நிலை குறித்து அறிந்து முதியோர் உதவித்தொகை பெற தகுதியில்லாதோர் பட்டியலை தயாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் கேட்டபோது, விருதுநகர் மாவட்டத் தில் மட்டும் 61 ஆயிரம் பேர் முதியோர் உதவித்தொகை பெற்று வருகின்றனர். இதுவரை, இவர்களில் 17 ஆயிரம் பேர் தகுதியில்லாதவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தகுதியில்லாதோர் பட்டியல் தயா ரித்து, ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரத் தினத்தையொட்டி கிராமங்களில் நடைபெறும் சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, தகுதியில்லாதவர்களின் பெயர்கள் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x