Published : 03 Apr 2024 01:05 PM
Last Updated : 03 Apr 2024 01:05 PM

“முதல்வர் மு.க.ஸ்டாலினால் தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த முடியுமா?” - அண்ணாமலை சவால்

கோவை: பிரதமரின் உழைப்பையும், முதல்வரின் உழைப்பையும் பாருங்கள் யார் களத்தில் நின்று மக்களுக்காக பணியாற்றுகிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். முதல்வர் களத்துக்கே வராத காரணத்தினால் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் கொள்ளை அடிப்பதையே முழு நேர பணியாக வைத்திருக்கிறார்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், “உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை மற்றும் நாளை மறுநாள் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்துக்கு வருகிறார். நாளை மதியம் அமித் ஷா, டிடிவி தினகரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார். குறிப்பாக மதுரையில் இருந்து கன்னியகுமரி வரை தமிழக மக்களை சந்தித்து மக்களின் அன்பையும் ஆதரவையும் பெறவிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவரின் வருகை உறுதி செய்யப்பட்ட பிறகு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

சீமான் தினம் ஒரு வார்த்தை தினம், தினம ஒரு தத்துவம் என அரசியல் செய்து கொண்டிருக்கிறார். நேற்று முன் தினம் சீமானின் ஸ்லீப்பர் செல் அண்ணாமலை என்று கூறினார்கள். இன்று அவரை ஏதோ விமர்சித்திருக்கிறார்கள் போல. முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது தமிழகத்துக்குள் எட்டி பார்க்கிறார். இந்த மூன்று ஆண்டுகளில் ஸ்பெயின் , துபாய், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதனால் உபயோகமாக ஒரு பணமும் வரவில்லை.

முதல்வர் களத்துக்கே வராத காரணத்தினால் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் கொள்ளை அடிப்பதையே முழு நேர பணியாக வைத்திருக்கிறார்கள். போட்டி போட்டுக் கொண்டு சம்பாதிக்கலாம் என இருக்கிறார்கள். முதல்வர் வீதிக்கு வந்தால் மக்கள் அவர்மீது எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். முதல்வர் வீதி வீதியாக வர வேண்டும். ஆனால் அவர் வருவதில்லை. முதல்வரை ரோடு ஷோ வர சொல்லுங்கள் பார்க்கலாம். தமிழகத்தின் ஒரு நகரத்தை தேர்ந்தெடுத்து 10 கிலோமீட்டர் வரை அவரே ஒரு ரோடு ஷோ வரட்டும். எத்தனை பேர் முதல்வரை காண வருகிறார்கள் என்பதை பார்க்கலாம், நான் சவால் விடுகிறேன்.

பிரதமர் மோடி கோவையில் ரோடு ஷோ வந்து சென்று இருக்கிறார். அமித் ஷா தேனியில் ரோடு ஷோ வர இருக்கிறார். மீண்டும் மோடியின் முக்கியமான ரோடு ஷோ ஒரு இடத்தில் நடக்க இருக்கிறது. அவர்கள் இரண்டு மூன்று மணி நேரம் நின்று மக்களை சந்திக்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு மாய உலகில் அவரே கட்டிய கோட்டைக்குள் அமர்ந்து கொண்டு பிரதமரை குறை சொல்கிறார்.

பிரதமரின் உழைப்பையும், முதல்வரின் உழைப்பையும் பாருங்கள் யார் களத்தில் நின்று மக்களுக்காக பணியாற்றுகிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். பணம் இருப்பவர்களிடம் வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது. தமிழகத்தில் குறிப்பாக யார் தந்தை தாத்தா பெயரை வைத்து அரசியலுக்கு வந்தார்களோ, அவர்கள் அனைவரும் எவ்வளவு கொச்சையாக பேச முடியும் என்பதில் அவர்களுக்குள்ளேயே ஒரு போட்டி நிலவுகிறது, அதில் இந்திய அளவில் கொச்சையாக பேசுவதில் முதன்மையாக ஒருவர் இருக்கிறார் என்றால் அது உதயநிதி ஸ்டாலின்தான்.

அருவருக்கத்தக்க வகையில் பெண்களை, தாய்மார்களை, சகோதரிகளை பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். தனது நண்பர்களிடம் இரவு அமர்ந்து பேசுவதை எல்லாம் உதயநிதி ஸ்டாலின் வெளியில் வந்து பேசிக் கொண்டிருக்கிறார். இதற்கு தமிழக மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். கச்சத்தீவு விவகாரத்தில் திமுக தேர்தல் நேரத்தில் நாடகம் நடத்துகிறது. கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் மாபெரும் துரோகம் செய்திருக்க்கிறது.

மொழிப்போர் தியாகிகளை வைத்து அரசியல் செய்கிறார்கள் திமுகவினர். தந்தை பெரியார் இந்தி எதிர்ப்பு போராட்டத்தைப் பற்றி என்ன கூறினார். காலி போலி என்று கூறினார், துப்பாக்கியால் சுட வேண்டும் என்று கூறினார். அப்பொழுது ஏன் திமுக, பெரியாரைப் பற்றி பேசவில்லை. இந்தியை திணித்தது காங்கிரஸ் தான். அப்போது அவர்களின் கூட்டணியில் திமுக ஏன் இருக்கிறது?

என் மீது பயம் இருப்பதால் என்னை ஆட்டுக்குட்டி என விமர்சனம் செய்கிறார்கள். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஒரு நாள் ஒரு சொட்டு வியர்வை சிந்தியிருக்கிறரா? அவர்களின் தந்தை கொள்ளையடித்து சம்பாதித்து வைத்திருக்கிறார்.... கிராமத்திலோ, நகரத்திலேயோ உழைத்திருக்கிறாரோ? தனிமனித தாக்குதலில்தான் கோவை அரசியலே நடந்து கொண்டிருக்கிறது. ஆட்டைக் கொடுமைப்படுத்தாமல் பிரியாணி செய்யுங்கள் இதுதான் என அன்பான வேண்டுகோள். கோவையில் புதிய சரித்திரம் எழுதப்பட்டிருக்கிறது. திமுக பணத்தை வைத்து கொங்கு மண்டலத்தை வென்றுவிடலாம் என நினைக்கிறார்கள், அது கனவிலும் நடக்காது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x