Published : 10 Apr 2018 01:05 PM
Last Updated : 10 Apr 2018 01:05 PM

ஐபிஎல்; சேப்பாக்கம் மைதானத்துக்குப் பூட்டு: தடையை மீறிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது

 ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் கடுமையான போலீஸ் பாதுகாப்பையும் மீறி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானக் கதவை இழுத்து மூடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆவேசப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று போராடி வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் காவிரி பிரச்சினைக்காக மக்கள் போராடிவரும் சூழ்நிலையில் இளைஞர்களை திசை திருப்பும் விதமாக ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெறக் கூடாது என்ற கோரிக்கையை தமிழ் உணர்வாளர்கள், அரசியல் கட்சிகள் வைத்தனர்.

ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிடுவோம், வீரர்களை சிறைபிடிப்போம் என சில கட்சிகள் அறிவித்திருந்தன.

ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது என்ற எதிர்ப்பையும் மீறி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு காவல்துறை கடும் பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதுகாப்புப் பணிக்கு 13 துணை ஆணையாளர்கள் தலைமையில் 4000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கமாண்டோ படையின் ஒரு அணியும், சென்னை காவல் ஆயுதப்படையைச் சேர்ந்த அதி தீவிர படையின் நான்கு குழுக்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில் காலை முதலே ஸ்டேடியம் இருக்கும் சாலைகளை போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கடுமையான சோதனைகளுக்குப் பிறகே அனைவரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே உள்ள பறக்கும் ரயில்வே ஸ்டேஷன் வழியாக பயணிகள் போல் சிலர் வந்தனர். ஸ்டேடியம் அருகே போலீஸார் அசந்திருக்கும் நேரம் திடீரென மைதானம் வாசலை சங்கிலியால் இழுத்துப் பூட்ட முயன்றனர்.

அவர்களுக்கும் போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் அவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்கள் தங்கள் பாக்கெட்டிலிருந்து தமிழர் வாழ்வுரிமை கட்சிக் கொடிகளை வெளியே எடுத்துக் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் தடுத்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x