Published : 02 Apr 2024 05:46 PM
Last Updated : 02 Apr 2024 05:46 PM

மயிலாடுதுறை பாமக வேட்பாளரை மறித்து முழக்கமிட்ட கரும்பு விவசாயிகள்!

பாபநாசம் வட்டம், நரசிம்மபுரத்தில் வாக்குச் சேகரித்துச் சென்றத் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாமக வேட்பாளரை மறித்து முழக்கமிட்ட கரும்பு விவசாயிகள்.

கும்பகோணம்: நரசிம்மபுரத்தில் வாக்கு சேகரித்துச் சென்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாமக வேட்பாளரை மறித்து கரும்பு விவசாயிகள் முழக்கமிட்டனர்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் இன்று பாபநாசம் வட்டத்தில் வாக்கு சேகரித்தார். இவர், ஆதனூர்-புள்ளபூதங்குடி இடையில் உள்ள நரசிம்மபுரத்தில், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாகனத்தில் நின்றபடிச் சென்று வாக்குச் சேகரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டு, கடந்த 291 நாட்களாக போராடி வரும் விவசாயிகளான சரபோஜி. கலையரசன், செந்தில் மற்றும் பலர், பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் வாக்குச் சேகரித்துச் சென்ற வாகனத்தை திடீரென மறித்து முழக்கமிட்டனர்.

அப்போது, அவர்கள், ''இத்தனை நாளாக எங்குச் சென்றீர்கள், விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் ஏன் தலையிடவில்லை, கரும்பு விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டத்துக்கு ஏன் ஆதரவு தெரிவிக்காமல், விவசாயிகளிடமே ஏன் வாக்குச் சேகரிக்க வந்தீர்கள், யாருக்காக நீங்கள் வரவில்லை, எங்களது பிரச்சினையைத் தீர்க்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?'' எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு பாமக வேட்பாளரான ம.க.ஸ்டாலின் பதில் கூறாமல் மவுனமாக இருந்தார்.

பின்னர், அங்கு வந்த கட்சி நிர்வாகிகள், வாகனத்தை மறித்த கரும்பு விவசாயிகளை சமாதானப்படுத்தும் விதமாக ஓரமாக அழைத்துச் சென்றதும், வேட்பாளர் வந்த வாகனம் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றது. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x