Published : 02 Apr 2024 01:34 PM
Last Updated : 02 Apr 2024 01:34 PM

சென்னைக்கு அளித்த சிறப்பு நிதி ரூ.5000 கோடி என்ன ஆனது? - நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

சென்னை: “சென்னைக்கு ரூ.5000 கோடியை சிறப்பு நிதியாக வழங்கி உள்ளோம். வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் தமிழகத்துக்கு ரூ.900 கோடியை ஒதுக்கினோம். இந்த இரண்டு நிதிகளையும் தமிழக அரசு என்ன செய்தது. ஏற்கனவே வழங்கிய நிதிக்கு தமிழக அரசு கணக்கு கூற வேண்டும். ரூ.5000 கோடியை முறையாக செலவிட்டிருந்தால் மிக்ஜாம் புயலால் சென்னை பாதிக்கப்பட்டிருக்காது.” என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை பல்லாவரத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், “ஒரு நாட்டின் பாதுகாப்பு விஷயத்தையும், இறையாண்மை சம்பந்தப்பட்ட விஷயத்தையம் தேர்தலுக்காக தான் பேச வேண்டும் என்பதில்லை. எப்போது வேண்டுமானாலும் பேசலாம். அது நமது உரிமை. அதனால் இப்போது பேசப்படுகிறது. கச்சத்தீவு தொடர்பாக 50 ஆண்டுகளாக உண்மைக்குப் புறம்பான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

பொறுப்பில்லாத பேச்சுக்கள் நிறைய பேசப்படுகின்றன. கச்சத்தீவு நமது மீனவர்கள் வாழ்க்கையின் ஓர் அங்கம். மேலும், நமது பொருளாதார மண்டலத்திலும் முக்கிய பங்கு உள்ளது. அப்படி இருக்கையில் கச்சத்தீவை பேசக்கூடாது சொல்வது எப்படி இருக்கிறது.

திமுக, காங்கிரஸ் கட்சிகள் அப்போதும் கூட்டணி வைத்திருந்தன. இப்போதும் கூட்டணி வைத்துள்ளன. காங்கிரஸ் ஒரு தேசிய கட்சியாக இருந்துகொண்டு அதற்கு விளக்கம் கொடுக்காமல், அதை பேசக்கூடாது என்று சொல்கிறது. நேரு கச்சத்தீவை ஒரு தொல்லை என்றுள்ளார். இந்திரா காந்தியோ கச்சத்தீவை ஒரு சிறிய பாறை என்றுள்ளார்.

1974ல் வெளியுறவு செயலாளர் விரிவாக எடுத்துக்கூறியும், இதற்கெல்லாம் அப்போதைய முதல்வர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், பொய் பிரச்சாரம் மட்டும் செய்கிறார்கள். இதனை தெரிந்துகொள்ள வேண்டும் என்றே உண்மை தகவலை வெளியிட்டோம். தேர்தலுக்காக மட்டும் அல்ல. தேர்தல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சொல்ல வேண்டிய விஷயம் இது. தமிழ் மக்களுக்கு இதைப் பற்றிய உண்மை வேண்டும்.

தமிழக மக்களுக்கு விரோதமான செயல்களை காங்கிரஸ் கட்சி செய்யும்போது திமுக அமைதி காத்தது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தடை விதித்தபோதும் காங்கிரஸ் உடன் திமுகவே கூட்டணி. இப்படியாக தமிழக மக்களுக்கு விரோதமான செயல்களை காங்கிரஸ் ஒவ்வொரு முறை பண்ணும்போதும் ஒரு போராட்டம் கூட திமுக பண்ணவில்லை. மாறாக, இப்போது 21 முறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகிறார்கள்.

இந்த விவகாரத்தில் 10 ஆண்டுகளாக என்ன செய்தோம் எனக் கேட்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் கச்சத்தீவு தொடர்பாக இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அது விசாரணைக்கு வரும்போதே இதைப்பற்றி பேச முடியும்.

யாரை தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என்பதை எங்கள் கட்சி தீர்மானிக்கும். எங்கள் கட்சி எப்போது தீர்மானிக்கிறதோ, அப்போது தேர்தலில் போட்டியிடுவேன். தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு பணம் வருகிறது. ஏன், திமுகவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் பணம் வரவில்லையா. அதுவும் ஒரே நபரிடம் இருந்து அவ்வளவு பணம் கிடைக்க, அவர்களுக்குள் என்ன கொடுக்கல் வாங்கல் உள்ளது.

சென்னைக்கு ரூ.5000 கோடியை சிறப்பு நிதியாக வழங்கி உள்ளோம். வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் தமிழகத்துக்கு ரூ.900 கோடியை ஒதுக்கினோம். இந்த இரண்டு நிதிகளையும் தமிழக அரசு என்ன செய்தது. ஏற்கனவே வழங்கிய நிதிக்கு தமிழக அரசு கணக்கு கூற வேண்டும். ரூ.5000 கோடியை முறையாக செலவிட்டிருந்தால் மிக்ஜாம் புயலால் சென்னை பாதிக்கப்பட்டிருக்காது.

ரூ.5000 கோடியை 90 சதவீதம் செலவழித்து மழைநீர் வடிகால் பணிகளை செய்ததாக கூறினார்கள். ஆனால் பாதிப்பு ஏற்பட்டதே. பாதிப்புக்கு பின் 90 சதவீதம் பணிகள் முடியவில்லை என்றார்களே. மோடி அரசிடம் நிவாரண நிதி வரவில்லை என்று கூறுகிறார்கள். உண்மையை பேசுங்கள். நிவாரண நிதி உயர் மட்ட ஆலோசனை முடிந்தபிறகு வரத்தான் போகிறது.

போதைப்பொருள் விவகாரத்தில் தமிழகத்தின் நிலையை பார்த்தால் கண்ணீர் வருகிறது. குஜராத்தில் மட்டும் போதைப்பொருள் கைப்பற்றப்படுகிறதா.. தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களை என்ன சொல்வது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x