Last Updated : 02 Apr, 2024 11:05 AM

12  

Published : 02 Apr 2024 11:05 AM
Last Updated : 02 Apr 2024 11:05 AM

“பாஜக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - ஜி.கே.வாசன் சிறப்பு நேர்காணல்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமாகாவின் தலைவர் ஜி.கே.வாசன் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பிரத்யேக நேர்காணல்:

பாஜக கூட்டணியில் இருப்பதால்தான் தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கேட்டவுடன் கிடைத்ததாகவும் மற்ற கட்சிகளுக்கு கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

இது புரிதல் இல்லாதவர்களின் பேச்சு. தங்களால் முறைப்படி சின்னத்தை வாங்க முடியாததால், அரசியல் காழ்ப்புணர்ச்சி, பொறாமையில் பேசுகின்றனர். அப்படி பார்த்தால், 5 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த போதும், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வேறு ஒரு கட்சி சின்னத்தில் (இரட்டை இலை) போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கோட்பாடுகளின் அடிப்படையில் முறையாக சின்னத்தை பெற்றவர்களை குறை சொல்லக் கூடாது. ஒருவருக்கு வேண்டிய சின்னம் கிடைத்துள்ள நிலையில், அவருக்கு தேர்தல் ஆணையம் உதவி செய்தது என்று சொல்ல முடியுமா? உங்கள் பொறுப்புகளை நீங்கள் செய்யாமல் அரசு, தேர்தல் ஆணையத்தை குறை சொல்லக்கூடாது.

பாஜக கூட்டணியில் அதிமுகவை இணைக்க நீங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது. அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் சேராததற்கான காரணம் என்ன?

கூட்டணி பற்றி பேசுவதற்காக, அனுபவம் உள்ள மூத்த தலைவர்கள் பாஜகவிலேயே உள்ளனர். பாஜகவுக்காக நான் பேச வேண்டிய அவசியம் இல்லை. பாஜக கூட்டணியில் அதிமுக சேராததற்கான காரணம் குறித்து அக்கட்சியின் தலைவர்கள் தினமும் கூட்டங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் சொல்ல என்ன இருக்கிறது.

அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக நின்று வாக்குகளை பிரிப்பது திமுகவுக்கு தான் லாபம் என்கிறார்களே?

10 ஆண்டுகளுக்கு பின்னர், மத்திய பாஜக அரசின் மீது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் வலிமையான பாரதத்தை ஏற்படுத்தும். எங்கள் வெற்றியின் அடித்தளம் என்பது, 2026-ல் தமிழகத்தில் நல்லாட்சி அமையும் என்பதுதான்.

தமாகாவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

திமுக, அதிமுகவுக்கு எதிர்மறை வாக்குகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நேர்மையான வெளிப்படை தன்மை கொண்ட வேட்பாளர் தேவை என்றும், குறிப்பாக மத்திய அரசோடு ஒத்த கருத்துடைய வேட்பாளர் தேவை எனவும் மக்கள் முடிவு செய்துள்ளனர்.

திமுகவும், அதிமுகவும் பாஜகவையும், மோடியையும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், பாஜகவால் வெல்ல முடியுமா?

தேச பக்தி உடையவர்கள், நாடு முன்னேற வேண்டும், வல்லரசாக வேண்டும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மனசாட்சிப்படி எதிர் அணியின் தூற்றுக்கு துணைப்போக மாட்டார்கள்.

மூப்பனாரை பிரதமர் ஆகவிடாமல் தடுத்தது கருணாநிதி தான் என்ற விமர்சனம் நீண்டகாலமாக உள்ளது. அப்படி கருணாநிதி என்ன தான் செய்தார்?

சில விஷயங்கள் என்பது வரலாறு. வரலாற்றை மறுக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது. மறைந்தவர்களை பற்றி பேசுவது நல்லதல்ல.

பாஜக விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவதாக குற்றம் சாட்டி வந்த எதிர்க்கட்சிகள், தற்போது தேர்தல் பத்திரம் விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. இது பாஜகவுக்கு பாதகமாக அமையாதா?

நாட்டில் தவறு செய்பவர்கள் உயர் பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது. கட்சிகள், கூட்டணிகளுக்கு அப்பாற்பட்டு இதுபோன்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனை பாஜக ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

மத்தியிலும், மாநிலத்திலும் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் மூப்பனார் இருந்தார். தமாகாவுக்கு மீண்டும், அத்தகைய அரசியல் செல்வாக்கு கிடைக்குமா?

தேசிய கண்ணோட்டம் கொண்ட மாநில கட்சியாக தான் தமாகாவை ஜி.கே.மூப்பனார் வளர்த்து வந்தார். அதன் அடிப்படையிலேயே இப்போதும் தொடர்கிறது. வரும் காலத்தில் தமாகாவின் வளர்ச்சியை உறுதி செய்து கொள்வோம்.

பாஜகவுடன் வாசன் இணைந்தது மூப்பனாரின் கொள்கைக்கு எதிரானது என செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளாரே?

நான் காங்கிரஸில் இருந்து விலகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. என்னுடைய நினைவுகள் அவர்களுக்கு வந்துக் கொண்டே இருக்கிறது என்றால், அது அந்த கட்சியின் பலவீனத்துக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

கட்சி தொடங்கும் அனைவருக்கும் இருப்பதுபோல், உங்களுக்கு முதல்வராகும் திட்டம் இருக்கிறதா?

55 ஆண்டுகளாக பொற்கால ஆட்சி தமிழகத்தில் இல்லை. ஒத்த கருத்துள்ள கட்சிகளோடு சேர்ந்து அதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். அதில் காமராஜரின் அடிச்சுவடு அந்த ஆட்சியில் இருக்க வேண்டும்.

இன்றைக்கு உள்ள நிலையில், பாஜக தலைமையிலான நல்ல கூட்டணி தமிழகத்தில் வரவேண்டும் என்று நான் நினைப்பதில் எந்த தவறும் இல்லை. தமாகா பாஜகவுக்கு துணை நின்று செயல்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x