Published : 11 Apr 2018 12:23 PM
Last Updated : 11 Apr 2018 12:23 PM

காவிரி தாயே என்னை மன்னிப்பாயா?: நடிகர் விவேக் கவிதை ட்விட்

காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி தமிழ்நாட்டில் பல இடங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இதனால் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடந்தக் கூடாது என்று சென்னை அண்ணா சாலை பல்வேறு அமைப்புகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 700 பேரை தமிழக போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் காவிரி தாயுடன் உரையாடல் என நடிகர் விவேக், பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுருக்கிறார்.

இதோ அந்த உரையாடல் பதிவு:

நான்: காவிரித் தாயே! காவிரி தாயே!

கன்னட மண்ணில் பூ விரித்தாயே! - ஏன்

தமிழ்மகன் கேட்டால் கை விரித்தாயே?

காவிரி: முத்து மகனே! முட்டாள் மகனே!

கைவிட்டது நானா நீயா?;

செழித்துப் பாய்ந்தேன்; நீ சேமித்தாயா?

ஆழியில் கலக்கும்முன் அணை செய்தாயா?

நான்: இனி நான் என்ன செய்ய? சொல்வாயா?

காவிரி: சினிமா பார்த்து சிரி

கிரிக்கட், பாப்கார்ன் கொறி!

மழுங்கி போனதே உன் வெறி

நான்: தாயே என்னை மன்னிப்பாயா?

காவிரி: எழுந்து நில்! தயக்கம் கொல்!

இரைப்பை நிரப்புவது கலப்பை!

இதை உணராதவன் வெறும் தோல் பை

நான் உனக்கும் அன்னை

கன்னடர் உந்தன் உடன் பிறப்பு

காவிரியும் உனது நீர்ப் பரப்பு

இதை உரக்கச் சொல்; உன் உரிமை சொல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x