Published : 01 Apr 2024 01:57 PM
Last Updated : 01 Apr 2024 01:57 PM

கச்சத்தீவை மீட்க பாஜக எடுத்த நடவடிக்கை என்ன? - செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை

சென்னை: கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் கச்சத்தீவை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்றும் வருகிற மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியின் தமிழக விரோத போக்கிற்கு உரிய பாடத்தை மக்கள் நிச்சயம் புகட்டுவார்கள் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியாவிலேயே பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜகவையும் மிக அதிக அளவில் வெறுக்கப்படுகிற மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் அதை சகித்துக் கொள்ள முடியாமல் ஆதாரமற்ற அவதூறுகளை பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் பரப்பி வருகின்றனர். 1974 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை நாடுகளுக்கிடையே 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தம் குறித்து உண்மைகளை திரித்து கருத்துகளை கூறி வருகிறார்கள்.

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கும், கச்சத்தீவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்கிற போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. மோடி ஆட்சி அமைந்த 2014 முதல் 2024 வரை 400 படகுகள் பறிமுதலும், 3179 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இருநாடுகளுக்கிடையே அமைக்கப்பட்ட கூட்டு நடவடிக்கைக்குழு 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒருமுறை கூட கூடவே இல்லை. தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமைக்கப்பட்ட இக்குழுவை பாஜக அரசு ஏன் கூட்டவில்லை ? கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் கச்சத்தீவை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி பிரதமரான பிறகு கச்சத்தீவு குறித்து தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் தலைமை வழக்கறிஞர் முகுல் ரொக்டகி உச்ச நீதிமன்றத்தில் ‘கச்சத்தீவை திரும்ப எப்படி மீட்க முடியும் ? அப்படி மீட்க வேண்டுமென்றால் போர் தொடுத்து தான் மீட்க முடியும்.

வேறு எந்த வகையிலும் மீட்க முடியாது” என்று கூறிய பிறகு கச்சத்தீவு பற்றி பாஜக-வினர் பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? தமிழக மீனவர்கள் எல்லைகளை பொருட்படுத்தாமல் பாரம்பரியமாக மீன்பிடிக்கிற உரிமையை பெற்றுத் தருவதற்கு கையாலாகாத பாஜக அரசு கச்சத்தீவை பற்றி பேசுவது பிரச்சினையை திசைத் திருப்புகிற செயலாகும்.

இப்பிரச்சினையில் 10 ஆண்டுகளாக ஒரு துரும்பைக் கூட எடுத்து போடாத ஒன்றிய பாஜக அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பதவி பிரமாணத்தில் எடுத்துக் கொண்ட ரகசிய காப்பு உறுதிமொழியை அப்பட்டமாக மீறுகிற வகையில் கருத்து கூறியிருக்கிறார்.

285 ஏக்கர் பரப்பளவு கொண்ட மனித நடமாட்டம் இல்லாத கச்சத்தீவை பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். அந்த பிரச்சினையின் மூலமாக தமிழக மீனவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஆனால், இந்தியாவுக்கு சொந்தமான லடாக் பகுதியில் 38,000 சதுர கிலோ மீட்டர் பரப்பையும், அருணாசல பிரதேசத்தில் இந்திய - சீன எல்லையில் 90,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நிலத்தையும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சீனா ஆக்கிரமித்து அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

ஆனால், பிரதமர் மோடி இந்திய எல்லைப் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு இல்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் கருத்து கூறியதை விட தேசதுரோகச் செயல் வேறு என்ன இருக்க முடியும் ?

சீன ஆக்கிரமிப்பு குறித்து தட்டிக் கேட்க முடியாத பலகீனமான நிலையில் உள்ள பிரதமர் மோடி, கச்சத்தீவு குறித்து பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது ? மக்களவை தேர்தலில் தமிழக மக்களின் நலனில் அக்கறை இருப்பதாக நாடகமாடுவதற்காக தான் கச்சத்தீவை பற்றி திடீரென இப்பொழுது பேசுகிறார். 10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்பதற்கோ, தமிழக மீனவர்களின் கைது நடவடிக்கை, படகுகள் பறிமுதல் செய்வதை தடுத்து நிறுத்த முடியாத பிரதமர் மோடியின் சுயரூபத்தை தமிழக மீனவர்கள் நன்கு அறிவார்கள்.

பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அமலாக்கத்துறை சுதந்திரமாக செயல்படுவதாக கூறியிருக்கிறார். இன்றைய நிலையில் பாஜக-வோடு கூட்டணி வைக்க எந்த அரசியல் கட்சியும் முன்வராத நிலையில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து எதிர்கட்சிகளை ஒடுக்குகிற முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். 2014 முதல் 2022 வரை அமலாக்கத்துறை 5493 வழக்குகள் போட்டிருக்கிறது.

இதில் 90 சதவிகித வழக்குகள் எதிர்கட்சியினர் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கிறது. ஜார்க்கண்ட் முதலமைச்சர் சிபுசோரன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி உள்ளிட்ட பல எதிர்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருப்பவர்கள் பாஜகவில் சேர்ந்தால் அவர்களது சலவை எந்திரத்தின் மூலம் தூய்மையானவர்களாக ஆக்கப்பட்டு அமைச்சர் பதவி தரப்படுகிறது. இதுதான் மோடியின் ஊழல் ஒழிப்பு நாடகமாகும்.

பாஜக ஆட்சி தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாக, கார்ப்பரேட்டுகளுக்கு பாதுகாவலனாக, ஏழை, எளிய மக்களுக்கு எதிரானதாக 10 ஆண்டுகாலமாக செயல்பட்டதை பிரதமர் மோடியின் கோயபல்ஸ் பிரச்சாரத்தால் மூடி மறைக்க முடியாது. வருகிற மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியின் தமிழக விரோத போக்கிற்கு உரிய பாடத்தை மக்கள் நிச்சயம் புகட்டுவார்கள்.

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக பதவி பிரமாண உறுதிமொழியை மீறிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை குடியரசுத் தலைவர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x