Last Updated : 31 Mar, 2024 01:14 PM

2  

Published : 31 Mar 2024 01:14 PM
Last Updated : 31 Mar 2024 01:14 PM

எப்படி இருக்கிறது ‘ஸ்டார் தொகுதி’ கோவை? - ஓர் அலசல்

அண்ணாமலை, கணபதி ப.ராஜ்குமார், கலாமணி ஜெகநாதன், சிங்கை ஜி.ராமச்சந்திரன்

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்படும் கோவை மக்களவைத் தொகுதியில், சிறு, குறு தொழிற்சாலைகள்தான் பிரதான தொழிலாக உள்ளன. நெசவுத் தொழிலும், பஞ்சாலைகளும், கனரக தொழிற்சாலைகளும், மென்பொருள் நிறுவனங்களும் பல ஆயிரக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை அளிக்கின்றன.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடப் போவதாக அறிவித்ததில் இருந்து கோவை மக்களவைத் தொகுதி, தமிழகத்தில் விஐபி அந்தஸ்து பெற்ற தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம் பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் இதில் வருகின்றன.

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக, அதன் தமிழக தலைவர் அண்ணாமலை, திமுக சார்பில் முன்னாள் மேயரும், மாநகர் மாவட்ட அவைத் தலைவருமான கணபதி ப.ராஜ்குமார், அதிமுக வேட்பாளராக சிங்கை ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமாருக்கு ஆதரவாக, கோவை மக்களவை தொகுதி பொறுப்பாளரான அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா களத்தில் பணியாற்றி வருகிறார். அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரனுக்கு ஆதரவாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது எம்.எல்.ஏ-க்கள், சகாக்களுடன் களமிறங்கி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் முடித்த கையோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதன் களமிறங்கியுள்ளார். இதனால் கோவை தொகுதியின் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 2021-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது. 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில், 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், திமுக கூட்டணியின் ( மநீம நீங்கலாக ) சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட மா.கம்யூ கட்சியின் பி.ஆர்.நடராஜன் 5 லட்சத்து 71 ஆயிரத்து 150 வாக்குகளை பெற்று வென்றார்.

பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 92 ஆயிரத்து 007 வாக்குகள் பெற்றார். புதுமுகமாக களமிறங்கிய மநீம வேட்பாளர் மகேந்திரன் 1 லட்சத்து 45 ஆயிரத்து 104 வாக்குகளை பெற்றார். கடந்த 2014-ல் நடந்த மக்களவை தேர்தலில் கோவையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் களமிறங்கினர். இதில், அதிமுக வேட்பாளர் ஏ.பி.நாகராஜன் 4 லட்சத்து 31 ஆயிரத்து 717 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 89 ஆயிரத்து 701 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார்.

திமுக வேட்பாளர் கணேஷ்குமார் 2 லட்சத்து 17 ஆயிரத்து 083 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.பிரபு 56 ஆயிரத்து 962 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். 2009-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், மா.கம்யூ கட்சியின் வேட்பாளர் பி.ஆர். நடராஜன் போட்டியிட்டு 2 லட்சத்து 93 ஆயிரத்து 165 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.பிரபு 2 லட்சத்து 54 ஆயிரத்து 501 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார்.

கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு, தமிழக அரசின் விதிமுறைகளை ஏற்க வேண்டும். கோவையிலிருந்து துபாய் உள்ளிட்ட முக்கிய வெளி நாடுகளுக்கு விமானங்களை இயக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை கோவையில் தொடங்க வேண்டும். ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கு, தற்போது காணப்படும் பஞ்சு விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

உற்பத்தித் துறை சார்ந்த எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் வங்கி வட்டிவிகிதம் குறைப்பு, சிறப்பு மானியத் திட்டங்கள் அமல்படுத்துதல், கோவையில் மூலப் பொருட்கள் சேமிப்பு கிடங்கு வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த தங்கம் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தை 4 சதவீதமாக குறைக்க வேண்டும்.

தொடர் விபத்துகள் நடக்கும் 26 கிலோ மீட்டர் தூரம் கொண்ட, கோவை எல் அன்ட் டி புறவழிச் சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும், 120 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கோவை - கரூர் சாலையை விரிவுபடுத்த வேண்டும்.

கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கி அத்திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மக்களால் முன் வைக்கப்படுகின்றன.

கோவையில் தொடக்கத்திலிருந்து இதுவரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட்கள் என மாறி, மாறி வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் காங்கிரஸ் கட்சியினர் 5 முறையும், கம்யூனிஸ்ட் கட்சியினர் 7 முறையும், திமுக மற்றும் பாஜக தலா இருமுறையும், அதிமுக ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. மத அடிப்படையில் இந்துக்கள் 80 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 5 முதல் 10 சதவீதமும், இஸ்லாமியர்கள் 7 முதல் 8 சதவீதமும், ஜெயின் சமூகத்தினர் 1.5 சதவீதமும், மீதம் பிற மதத்தினரும் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x