Published : 31 Mar 2024 06:14 AM
Last Updated : 31 Mar 2024 06:14 AM

போராட்ட வழக்குகளை காரணம் காட்டி பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுக்க கூடாது: நீதிமன்றம்

கோப்புப்படம்

மதுரை: நீட், குடியுரிமை, ஹிஜாப் போராட்ட வழக்குகளை காரணம் காட்டி, பாஸ்போர்ட் புதுப்பிக்க மறுப்பதை ஏற்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் வடமதுரையைச் ேசர்ந்த பாத்திமா சபரிமாலா, உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது இயற்பெயர் சபரிமலா அழகர்சாமி. இஸ்லாம் மதத்துக்குமாறி, பாத்திமா சபரிமாலா என்றபெயரை பதிவு செய்துகொண்டேன். நான் ஏற்கெனவே எடுத்துவைத்திருந்த பாஸ்போர்ட் காலாவதியானதால், புதுப்பிக்கக் கோரிமதுரை மண்டல பாஸ்போர்ட்அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தேன்.

எனது விண்ணப்பத்தைப் பரிசீலித்த பாஸ்போர்ட் அலுவலர், என் மீது கள்ளக்குறிச்சி, அரவக்குறிச்சி, காரைக்குடி, கீழக்கரை உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு இருப்பதால், பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முடியாது என தெரிவித்தார்.

இந்த வழக்குகள், நீட் எதிர்ப்புப்போராட்டம், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம், ஹிஜாப்அணிய தடை விதித்ததற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்றதற்காக பதிவு செய்யப்பட்டவை. இந்த வழக்குகளைத் தவிர, என் மீது வேறு எந்த குற்ற வழக்கும் நிலுவையில் இல்லை.

போராட்ட வழக்குகளைக் காரணம் காட்டி பாஸ்போர்ட் புதுப்பிக்க மறுப்பதை ஏற்க முடியாது. நான் எனது வாழ்வாதாரத்துக்காக விரைவில் அரபு நாட்டுக்கு வேலைக்குச் செல்ல உள்ளேன். இதனால் எனது பாஸ்போர்ட்டை புதுப்பித்துத்தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, மனுதாரர் இந்துவாக பிறந்தவர். தற்போது இஸ்லாம் மதத்துக்கு மாறி, தனது பெயரைபாத்திமா சபரிமாலா என மாற்றிக்கொண்டார் இதை உறுதிப்படுத்தும் வகையில், அரசிதழில் பெயர் மாற்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் மீது வழக்குகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அவரது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுக்கப்பட்டுள்ளது.

அந்த வழக்குகள் அனைத்தும் பொதுப் பிரச்சினைகள் சார்ந்த போராட்டத்தில் பங்கேற்றதற்காக பதிவு செய்யப்பட்டவை. அந்தவழக்குகளில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால், மனுதாரருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பதை ஏற்க முடியாது.

எனவே, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர், மனுதாரருக்கு உரிய பெயர் மாற்றம் செய்து, புதிய பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x