Published : 31 Mar 2024 04:04 AM
Last Updated : 31 Mar 2024 04:04 AM

“தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக டெபாசிட் பெற முடியாது” - உதயநிதி ஸ்டாலின்

சிதம்பரம் மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து ஜெயங்கொண்டத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அரியலூர்: தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக டெபாசிட் பெற முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பேசியது: இங்கு திரண்டுள்ள கூட்டத்தைப் பார்க்கும்போது, பிரச்சார கூட்டம் போல தெரியவில்லை. விசிக மாநாடு போல உள்ளது. கடந்த முறை பானை புதிய சின்னம் என்பதால், திருமாவளவன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், தற்போது பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி பெறப்பட்டுள்ள பானை சின்னம் உலக அளவில் பேசப்படுகிறது. எனவே, இந்த முறை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைத்து, மக்களவைக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட 8,733 ஏக்கர் நிலங்கள் விவசாயிகளிடம் திருப்பி தரப்பட்டுள்ளன. ஜெயங்கொண்டம் அரசு கல்லூரிக்கு ரூ.16.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டத்துக்கு புதிய பேருந்து நிலையம் வரவுள்ளது. ஜெயங்கொண்டத்தில் சிப் காட் தொழிற்சாலை, புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்படும். கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் கட்டப்படும்.

கரோனா காலக்கட்டத்தில் விளக்கை ஏற்றி, தட்டில் தட்டினால் கரோனா ஓடிவிடும் எனமக்களை ஏமாற்றியவர் பிரதமர்மோடி. கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் பயந்தபோது, தமிழக முதல்வர் தனக்கு கரோனா ஊசியை செலுத்திக்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிப்படி தமிழகத்தில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் போன்றவை நிறைவேற்றப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் திட்டங்களை கர்நாடகா,ஆந்திரா மாநிலங்கள் பின் பற்ற உள்ளன. தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட டெபாசிட் பெற முடியாது. தமிழகத்தில் கடும் வெள்ளம் வந்த போது திரும்பிக் கூட பார்க்காத பிரதமர் மோடி இப்போது தமிழகத்தை சுற்றிச் சுற்றி வருகிறார். தமிழகத்தில் நீட்தேர்வை எதிர்கொள்ள முடியாமல் இதுவரை 22 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய பாஜக மற்றும் அதிமுகவினருக்கு தேர்தலில் உரியபாடத்தை வாக்காளர்கள் கற்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x