Published : 29 Mar 2024 06:12 AM
Last Updated : 29 Mar 2024 06:12 AM

கடைசி நிகழ்ச்சியில் கரைவேட்டி கட்டாத கணேசமூர்த்தி எம்.பி. - தற்கொலைக்கான காரணங்களை பட்டியலிடும் நிர்வாகிகள்

ஈரோட்டில் நடந்த திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், கட்சிக் கரையுடன் கூடிய வேட்டி கட்டாமல் பங்கேற்ற கணேசமூர்த்தி. (கோப்பு படம்)

ஈரோடு/கோவை: மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்பதால் மதிமுக தலைமை மீதுஅதிருப்தியுடன் இருந்த கணேசமூர்த்தி, கடைசியாக பங்கேற்ற திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கட்சி கரை வேட்டியைக்கூட கட்டாமல் புறக்கணித்தார் என்றுஅவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை குமாரவலசுவை சேர்ந்தகணேசமூர்த்தி 1978-ல் திமுகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.1993-ல்மதிமுகவை வைகோ தொடங்கியபோது, அவருடன் சென்ற 9 மாவட்டச் செயலாளர்களில் கணேசமூர்த்தியும் ஒருவர்.

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியது தொடர்பான பொடா வழக்கில் வைகோவுடன் சேர்த்து கணேசமூர்த்தியும் கைதானார். திமுகவில் இருந்தபோது மொடக்குறிச்சி எம்எல்ஏவாக இருந்த கணேசமூர்த்தி, மதிமுகவில் இணைந்த பின்னர் பழநியில் ஒருமுறையும், ஈரோடு தொகுதியில் 2 முறையும் எம்.பி.யாகத் தேர்வு பெற்றவர்.

2016 முதல் மதிமுக மாநிலப் பொருளாளர் பதவி வகித்து வந்தார்.2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம் பெற்ற நிலையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்காக மதிமுக பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், திமுகவில் இணைந்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று,எம்.பி.யானார். இம்முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கடந்த 24-ம் தேதி விஷமாத்திரை கரைசலைக் குடித்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து கணேசமூர்த்தியின் நண்பர்கள், கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: மதிமுகவில் துரை வைகோ முன்னிலைபடுத்தப்பட்ட பிறகு, கட்சித் தலைமை எடுக்கும்முடிவுகள் குறித்து கணேசமூர்த்தியிடம் ஆலோசனை பெறப்படவில்லை. தனக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது.

மக்களவைத் தேர்தல் தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தையில், ஈரோடு தொகுதி மட்டும்மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மதிமுகவுக்கு 3 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டதால், இரண்டாவது சந்திப்பு பேச்சுவார்த்தையின்போது, ஈரோடுதொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்படவில்லை.

இதையறிந்த கணேசமூர்த்தி, "திமுக ஈரோடு தொகுதியை கொடுக்க முன்வந்தும், அதை மறுத்தது ஏன்?" என ஆதங்கப்பட்டார். மேலும், தன்னை திட்டமிட்டு ஒதுக்குவதை புரிந்துகொண்ட அவர், இதுதொடர்பாக வைகோ தன்னிடம் பேசவில்லை என்று வருத்தப்பட்டார்.

மாவட்ட நிர்வாகிகள் சரிவர பழகாதது, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகியை மீண்டும் சேர்க்க பரிந்துரைத்தும், அதை கட்சித் தலைமை ஏற்காதது போன்றகாரணங்களால், கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துவிட்டார்.

கடந்த 22-ம் தேதி மாலை ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் அறிமுகக் கூட்டத்தில் கணேசமூர்த்தி பங்கேற்றார். திராவிட இயக்க நிர்வாகிகள் உயிராகக் கருதும் கட்சி கரை வேட்டியைத் தவிர்த்து, கரை இல்லாத வேட்டி அணிந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது உடன்வந்த ஒருவரிடம், ‘இனி மதிமுகவில்பயணிக்க முடியாது’ என்றும்கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.அவரது டைரிக் குறிப்புகளில் தற்கொலைக்கான காரணம் இருக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

வைகோ மறுப்பு: கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்தால், ஈரோடு தொகுதியை பரிசீலனை செய்யுங்கள் என கணேசமூர்த்தி என்னிடம் கேட்டிருந்தார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், வெற்றி பெறும் தொகுதியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

நாங்கள் இருவரும் 50 ஆண்டுகளுக்கு மேலாக பழகியவர்கள். கொள்கையும், லட்சியமும் பெரிது என வாழ்ந்த கணேசமூர்த்தி, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலனுக்காக உழைத்தவர். சில நாட்களாகவே அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக கட்சியினர் தெரிவித்தனர். ஆனால், இப்படி ஒரு முடிவுக்கு அவர் வருவார் என கருதவில்லை. மன உறுதியும், துணிச்சலும் கொண்ட அவர் எம்பி ‘சீட்’ கிடைக்காததால் இறந்தார் என்பது உண்மை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x