Published : 28 Mar 2024 11:05 AM
Last Updated : 28 Mar 2024 11:05 AM

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” - வைகோ

ஈரோடு: "எம்.பி சீட் கிடைக்காததால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்வதில் ஒரு சதவிகிதம் கூட உண்மையில்லை. இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய கணேசமூர்த்தி இப்படி எங்களை நட்டாற்றில் விட்டு விட்டு போய்விட்டார்." என்று வைகோ கண்ணீர் மல்க உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் காலமானார்.

அவருக்கு அஞ்சலி செலுத்த கோவை வந்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, எம்.பி சீட்டுகாக கணேசமூர்த்தி தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று விளக்கினார்.

இதுதொடர்பாக விமானநிலையத்தில் கண்ணீர்மல்கப் பேசிய வைகோ, “கணேச மூர்த்தி துணிச்சலானவர், மன உறுதி கொண்டவர். அவர் இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவே இல்லை.

மூன்று முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறை சீட் ஒதுக்கீடு பற்றி நான் அவரிடம் “சட்டமன்ற தேர்தல் வருகிறது. அதில் உங்களுக்கு விருப்பமான தொகுதியில் நீங்கள் நின்றுகொள்ளலாம்." என்று சொன்னேன். அதற்கு, “அதை பற்றி ஒன்றும் இல்லை. திமுக இரண்டு சீட் ஒதுக்கினால் எனக்கு வாய்ப்பளியுங்கள். ஒரு சீட் கொடுத்தால் துரை வைகோ நிற்கட்டும்.” என்று தான் கணேசமூர்த்தி சொன்னார்.

துரை வைகோ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுகூட என் வீட்டுக்கு வந்தார். நானும் பலமுறை டெல்லியில் உள்ள அவர் வீட்டுக்கு சென்றுள்ளேன். நாங்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பழகியுள்ளோம்.

கொள்கை லட்சியம் தான் பெரிது என்று வாழ்ந்தவர் கணேசமூர்த்தி. ஆனால், சமீப காலமாக அவர் ஒரு மனஅழுத்தத்தில் இருப்பதாக ஈரோடு மாவட்ட செயலாளர்கள் மற்றும் கணேசமூர்த்தியின் மகனும் சொன்னார்கள். எம்.பி சீட் விவகாரத்தை பொறுத்தவரை கணேசமூர்த்தி மகிழ்ச்சியாகவே இருந்தார். துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கூட என்னிடம் பேசினார்.

இருதய சிகிச்சைக்காக நான் தான் முதலில் கணேசமூர்த்தியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். அதன்பின் மூன்று மாதத்துக்கு ஒருமுறை வந்து மருத்துவரை பார்த்துவிட்டு என்னையும் பார்த்துவிட்டு செல்வார். அவர் இப்படி ஒரு முடிவுக்கு வருவார் என்று நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. இடி தலையில் விழுந்ததுபோல் உள்ளது.

மக்கள் நலனே தன்னுடைய கடமை என்று வாழ்ந்த கணேசமூர்த்தி இப்படி ஒரு முடிவெடுப்பார் என்று நான் நினைக்கவேயில்லை. அவர் மருந்து குடித்துவிட்டார் என்று கேட்டபோதே என் உயிரெல்லாம் போய்விட்டது. மிகவும் துணிச்சல், மன உறுதி வாய்ந்தவர் அவர் இப்படி செய்ததில் துயரம் தான். எம்.பி சீட் கிடைக்காததால் தான் தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்வதில் ஒரு சதவிகிதம் கூட உண்மையில்லை. இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய கணேசமூர்த்தி இப்படி எங்களை நட்டாற்றில் விட்டு விட்டு போய்விட்டார்." என்று வைகோ உருகினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x