Published : 28 Mar 2024 10:46 AM
Last Updated : 28 Mar 2024 10:46 AM

“அதிமுகவினர் மீது பொய் வழக்கு பதிந்த நீலகிரி போலீஸார் மீது சட்ட நடவடிக்கை” - இபிஎஸ் எச்சரிக்கை

எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுகவினர் மீது உதகை போலீஸார் பொய் புகார் பதிவு செய்துள்ளனர். அதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மக்களவைத்தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வன் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் கடந்த 25-ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை உதகை காபி ஹவுஸ்-ல் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய நீலகிரி மாவட்டக் காவல் துறையிடம் உரிய அனுமதி பெற்றிருந்தனர்.

அதன்படி, 25-ம் தேதி காலை சுமார் 11 மணி அளவில் ஊர்வலம் செல்வதற்கு தயாராக இருந்த நிலையில், உதகை காவல் துறையினர் வேண்டுமென்றே பல்வேறு தடுப்புகளைப் போட்டு அதிமுகவினர் ஊர்வலம் செல்ல அனுமதிக்காமல் தாமதப்படுத்தினர். பிறகு 1 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல் துறையிடம் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்திய பிறகு, காவல் துறை அதிமுக வேட்பாளரையும், தொண்டர்களையும் பிற்பகல் 12.30 மணிக்கு ஊர்வலம் செல்ல அனுமதித்துள்ளனர்.

பிறகு, தேர்தல் விதியின்படி 5 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பிற்பகல் 12.55 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளே செல்ல முடிந்தது. காவல் துறையினர் தேவையின்றி அதிமுக ஊர்வலம் செல்ல காலதாமதம் செய்ததை எதிர்த்து, தொண்டர்கள் அமைதியான முறையில் சாலை மறியலில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.ஆனால், உதகை காவல் துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தி கும்பலை கலைத்துள்ளனர்.

காவல் துறையினரின் தவறான நடவடிக்கைகளை கட்சி வழக்கறிஞர்கள் இந்திய தேர்தல் ஆணையம், மாவட்டத் தேர்தல் அலுவலர் ஆகியோரிடம் 26-ம் தேதி புகார் தெரிவித்தனர். ஊர்வலம் செல்ல காலதாமதம் செய்ததற்கு, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிமுகவினரிடம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

ஆனால் உதகைடவுன் காவல் துறையினர் நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் கப்பச்சி வினோத் உள்ளிட்ட 20 பேர் மீது, பல நபர்களிடம் பொய் புகார்களைப் பெற்று ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்கு பதிவு செய்துள்ளது. அதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். தவறிழைத்த காவல்துறை மீது நடவடிக்கை எடுப்பதுடன், திமுகவுக்கு ஆதரவாக பொய்புகார் பதிவு செய்த உதகை காவல்துறை மீது சட்டப் படியான நடவடிக்கைகளை அதிமுக மேற்கொள்ளும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x