Published : 27 Mar 2024 10:42 AM
Last Updated : 27 Mar 2024 10:42 AM

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

சென்னை: மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சின்னம் தொடர்பாக முடிவினைத் தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் இவ்வாறாக மறுப்பு தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் மதிமுக பொதுச் செயலாளரின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.

இந்நிலையில், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம், பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்பதால், தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், “சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுகவின் கோரிக்கை மீது இன்று முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும், 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பம்பரம் சின்னம் பொது சின்னமாகவோ, ஒதுக்கீட்டு சின்னமாகவோ வகைப்படுத்தப்படவில்லை. மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது புதன்கிழமை காலைக்குள் முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கோரிய மனு மீது இன்று (புதன் கிழமை) காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. “இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்க முடியும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் ஒதுக்க முடியாது” என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து மதிமுகவுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.

தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த நிலையில், மதிமுக தரப்பு மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடலாம் எனத் தெரிகிறது. முன்னதாக, இன்று காலையில் பேட்டியளித்த துரை வைகோ, “சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் விரும்பும் சின்னம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் பிற கட்சிகள் வஞ்சிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிக்கும் கரும்பு விவசாயி சின்னம் தரவில்லை. அவர்கள் தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் கூட அந்த சின்னத்துக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளனர். அதுபோலவே இப்போது எங்களுக்கும் பம்பரம் சின்னத்தில் பிரச்சினை செய்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என நாங்கள் நம்புகிறோம். ஒருவேளை பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் மாற்று திட்டங்களும் வைத்துள்ளோம். அதன்படி வேறு சின்னத்தில் போட்டியிடுவோம்.” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x