Published : 27 Mar 2024 08:21 AM
Last Updated : 27 Mar 2024 08:21 AM

வெள்ளப் பாதிப்புகளுக்கு நிதி தருவதாக போனில் தெரிவித்த பிரதமர் மோடி ஏமாற்றிவிட்டார்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள சிந்தலக்கரையில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், தமிழக அமைச்சர்கள் மற்றும் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி உள்ளிட்டோர். படம்: என்.ராஜேஷ்

கோவில்பட்டி: வெள்ளப் பாதிப்புகளுக்காக நிதி தருவதாக போனில் தெரிவித்த பிரதமர் மோடி, பின்னர் ஏமாற்றி விட்டார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள சிந்தலக்கரையில் நேற்று இரவு நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், தூத்துக்குடி தொகுதிவேட்பாளர் கனிமொழி மற்றும் ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோரை ஆதரித்துமுதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு தங்களின் உயிரையும், உடலையும் அர்ப்பணித்த தியாகிகள் பிறந்த மண்ணுக்கு வந்திருக்கிறேன். ஒருவகையில் இப்போது நடப்பதும், சர்வாதிகாரியிடம் இருந்து ஜனநாயகத்தை மீட்பதற்கான விடுதலைப் போராட்டம்தான்.

தூத்துக்குடியில் மக்களுடன் மக்களாக கனிமொழி வாழ்ந்தார், உழைத்தார், போராடினார். உங்களுக்காக நாடாளுமன்றத்தில் முழங்கினார். மழைவெள்ளம் ஏற்பட்டபோது, அவரே தண்ணீரில் இறங்கி, மக்களுடன் மக்களாக நின்று, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். ஆனால், தூத்துக்குடி மக்களின் பிரதிநிதியான கனிமொழியை மேடையில் பிரதமர் அவமதித்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் அநியாயமாக கொல்லப்பட்டதை மறக்கமுடியுமா? ஆனால், இந்த சம்பவத்தை டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டதாக அப்போதைய முதல்வர் பழனிசாமி கூறினார். அவர் கூறியது பொய் என்பதும், பழனிசாமிக்கு தெரிந்துதான் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது என்பதும், நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் தெரிந்துவிட்டது.

பழனிசாமி நேற்று யாருடன் இருந்தார்? இன்று யாருடன் இருக்கிறார்? நாளை யாருடன் இருப்பார்? தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படியெல்லாம் அடகு வைத்தார்? எப்படி என்னைப் பற்றி அவதூறுகளைப் பரப்பினார்களோ, அதேபோல இப்போது உதயநிதியையும், பழனிசாமி விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார். ஆனால், பாஜகவைக் கண்டித்தோ, விமர்சித்தோ ஒரு வார்த்தைகூட பேசவில்லையே?

தமிழகத்துக்கு எதுவும் செய்யாமல், தமிழக மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு நான் தடையாக இருந்தேன் என்று பிரதமர் கூறுகிறார். ஒரே ஒரு சிறப்புத் திட்டத்தைக்கூட, 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மோடியால் கூற முடியவில்லை.

தமிழகத்தில் வெள்ளம் பாதித்தபோது, டெல்லியில் இருந்து என்னிடம் பேசிய பிரதமர் மோடி, ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட அமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்பி இருக்கிறேன், அவர் பார்வையிட்ட பிறகு, நிதி ஒதுக்கீடு செய்யப்படும்’ என்று கூறினார்.

பிரதமர் பதவியில் இருப்பவர் கூறினாரே என்று நம்பினேன். ஆனால், வாக்குறுதி அளித்தபடி நிதியைத் தரவில்லை. வழக்கமாக, மக்களுக்குக் கூறும் பொய்யைத்தான் எனக்கும் பரிசாகக் கொடுத்துள்ளார் மோடி. அவருக்கு தூத்துக்குடியிலும், ராமநாதபுரத்திலும் தோல்விப் பரிசு தயாராகிவிட்டது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக, நேற்று காலை தூத்துக்குடி தினசரி சந்தையில், வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக பொதுமக்களிடம் முதல்வர் வாக்கு சேகரித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x