Last Updated : 26 Mar, 2024 06:23 PM

 

Published : 26 Mar 2024 06:23 PM
Last Updated : 26 Mar 2024 06:23 PM

குறுகிய காலமே உள்ளதால் தேனி தொகுதி மலை கிராமங்களில் பிரச்சாரம் செய்ய முடியாத நிலை!

தேனி மலைப் பகுதிகள் | பிரதிநிதித்துவப் படம்

தேனி: பிரச்சாரத்துக்கான கால அளவு குறைவாக இருப்பதால் பரந்து விரிந்துள்ள தேனி தொகுதி முழுவதும் வேட்பாளர்களால் பிரச்சாரம் செய்ய முடியாத நிலை உள்ளது. குறிப்பாக வனகிராமம், மலையடி பகுதி வாக்காளர்களை ஒருமுறை கூட சந்திக்க இயலாத சூழ்நிலை இத்தொகுதி வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்புகள் கடந்த 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதன்படி 20-ம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு நாளையுடன் (புதன்) முடிவடைய உள்ளன. தேர்தல் அறிவிப்புகள் வெளியானாலும் கட்சிகளிடையே கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் அறிவிப்பு போன்றவை தாமதமாகின. வேட்புமனு பரிசீலனை, வாபஸ் பெறுவது போன்ற நடைமுறைகள் வரும் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரத்துக்கு குறுகிய காலமே உள்ளது.

தேனி தொகுதியைப் பொறுத்தளவில் வேட்பாளர், வரவேற்பு, அறிமுகம், கூட்டணி கட்சிகளை சந்தித்தல் போன்ற நிகழ்ச்சிகளிலே பல நாட்கள் சென்றுவிட்டன. இத்தொகுதி வன கிராமங்களையும், மலையடிவார பகுதிகளையும் அதிகம் கொண்டுள்ளது. வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிப்பதும் இந்த கிராமங்கள்தான். குறுகிய காலத்துக்குள் தொகுதி முழுக்க வேட்பாளர்கள் சென்று அங்குள்ள வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பு என்பது சிரமமே.

வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்துக்கு வரும் விஐபி.பேச்சாளர்களுக்கும் மாவட்ட, வட்ட தலைநகர் வழியே செல்லும் வகையிலே பயண திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இதுபோன்ற நேரங்களில் வேட்பாளர்களும் அவர்களுடனே தொடர்ந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே ஒன்றிய, நகர நிர்வாகிகள் மூலம் கிராமங்களுக்கு பிரச்சாரங்களைக் கொண்டு செல்ல கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக கிராமங்களில் குழு அமைத்து வேட்பாளர் புகைப்படம், சின்னம் போன்றவற்றை மக்கள் மனதில் பதிய வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளரின் குரலை பதிவு செய்து வாகன பிரச்சாரத்தில் கிராமம் தோறும் ஒலிக்கச் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

இருப்பினும் வேட்பாளர்களிடம் இருந்து கிளை, பூத்கமிட்டி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நிதி சென்றடையாத நிலை உள்ளது. இதனால் உட்கடை கிராமங்களில் பிரச்சாரம் தற்போது பெரியஅளவில் இல்லை. தேர்தலுக்கு இன்னமும் 3 வாரமே உள்ளதால் கிராமம் வரை பிரச்சாரங்கள் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கட்சியினர் கூறுகையில், ''மக்களவைத் தேர்தல் பிரச்சாரங்கள் பொதுவாக இப்படித்தான் இருக்கும். இருப்பினும் இம்முறை குறைவான கால அளவே உள்ளது. பிரதான கட்சிகளுக்கு கிராமம் வரை உள்கட்டமைப்பு வலுவாக இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.

கிராமங்களில் குழு அமைத்து பிரச்சாரத்தில் ஈடுபடுவது, வாகனங்களில் ஒலி பெருக்கி மூலம் குறுகிய காலத்தில் பல பகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்வது என்று பல்வேறு திட்டங்கள் உள்ளன. குறைவான கால இடைவெளி இருப்பதால் வேட்பாளர்களுக்கு ஒருவகையில் செலவும் குறைகிறது'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x