Last Updated : 26 Mar, 2024 02:49 PM

4  

Published : 26 Mar 2024 02:49 PM
Last Updated : 26 Mar 2024 02:49 PM

“தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக டெபாசிட் பெறாது” - ஜி.ராமகிருஷ்ணன் கணிப்பு

புதுச்சேரி: தமிழகம், புதுச்சேரியில் பாஜக டெபாசிட் பெறாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் சிபிஎம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: ''மத்தியில் பாஜக ஆட்சியில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி என இரட்டை எஞ்ஜின் ஆட்சி நடக்கிறது. ஆனால், மக்கள் நலன் எதுவும் பாதுகாக்கப்படவில்லை. கோரிக்கை எதுவும் நிறைவேற்றவில்லை. 2014-ல் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என பாஜக பொய் வாக்குறுதி கொடுத்தது. அதேபோல், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்றது. அதையும் நிறைவேற்றவில்லை.

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் போட்டியிடுகிறார். இரண்டு கட்சிகளும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடையை திறப்போம் என்றார்கள். ஆனால், ரேஷன் கடையை திறக்கவில்லை. மாறாக, தெருவுக்கு நான்கு ரெஸ்டோ பார்களை திறக்க அனுமதி கொடுத்தார்கள். ரெஸ்டோ பார், போதைப்பொருள் விளைவால் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மத்தியில் பாஜ அரசும், மாநிலத்தில் என்ஆர் காங்., பாஜ கூட்டணியும் படுதோல்வி அடைந்துள்ளது.

தேர்தல் பத்திரம் மூலம் நிதி திரட்டும் திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதை மீறி பாஜக அரசு திட்டத்தை அமல்படுத்தியது. தற்போது தேர்தல் பத்திர நிதி மூலம் பெறப்பட்ட ரூ.16 ஆயிரம் கோடியில் பாதிக்கு மேலான நிதி பாஜக கணக்குக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. நிதி கொடுத்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாஜகவின் மெகா ஊழல் வெளிப்பட்டுள்ளது.

தேர்தலில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதற்காக ஜார்க்கண்ட், டெல்லி முதல்வர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் செய்த குற்றத்துக்கு எந்த ஆதாரத்தையும் அவர்கள் வெளியிடவில்லை. அதேநேரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பாஜக கூட்டணியில் இணைந்தால் கைது நடவடிக்கை மாயமாக மறைந்துவிடுகிறது. சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறைகளைப் பயன்படுத்தி எதிர்கட்சிகளை முடக்கும் வேலையில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டில் 9 மாநில அரசுகளை பாஜக அரசு கலைத்துள்ளது.

எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலமாக அரசை முடக்கும் செயல்களில் பாஜக ஈடுபடுகிறது. தேர்தல் கணிப்புகள் பாஜகவின் அறிக்கையாகத்தான் வந்துள்ளது. தமிழகத்திலும், புதுவையிலும் பாஜக ஒரு தொகுதியில் கூட டெபாசிட் பெறாது. இந்த முறை 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெறும்'' என்றார். பேட்டியின்போது மாநில ச்செயலர் ராஜாங்கம் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x