Published : 25 Mar 2024 04:11 PM
Last Updated : 25 Mar 2024 04:11 PM

அதிமுக சின்னம், கொடி விவகாரம்: ஐகோர்ட் உத்தரவால் ஓபிஎஸ் அணிக்கு பின்னடைவு

ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப்படம்

சென்னை: அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் அகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது ஓபிஎஸ் அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த மேல் முறையீட்டு மனுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? இல்லையா? என்பது குறித்து நிலுவையில் உள்ள மூல வழக்கில் தான் முடிவு செய்ய முடியும் என உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது. 42 ஆண்டுகளாக அதிமுகவின் அடிப்படை தொண்டர், முதல்வர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த தனக்கு, கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்தது ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதால் பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்களோ அல்லது கட்சியின் தொண்டர்களோ புகார் அளிக்காத நிலையில், எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை. இரண்டு விதமான கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றி உள்ளது என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இரட்டை இலை சின்னத்தை தனது தலைமையில் இருந்த மதுசூதனனுக்கே தேர்தல் ஆணையம் வழங்கியது. இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுக தடை விதிக்கக் கூடாது என கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தை அணுக தடையில்லை. இந்த வழக்கில் தற்போது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, இறுதி விசாரணைக்காக இந்த வழக்கை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x