Published : 25 Mar 2024 05:03 AM
Last Updated : 25 Mar 2024 05:03 AM

விவசாயிகளுக்கு தமிழக அரசு துரோகம்: திருச்சி பொதுக்கூட்டத்தில் பழனிசாமி குற்றச்சாட்டு

திருச்சி நவலூர்குட்டப்பட் டில் நேற்று நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக பிரச்சார கூட்டத் தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார். உடன் , பிரேமலதா, கிருஷ்ணசாமி, நெல்லை முபாரக் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் , நிர்வாகிகள். படம்: ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: தமிழகத்துக்கும், தமிழக விவசாயிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் துரோகம் இழைப்பதாக திருச்சி நவலூர்குட்டப்பட்டில் நடந்த அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக பொதுக் கூட்டத்தில் பழனிசாமி குற்றம்சாட்டினார்.

அதிமுக கூட்டணி சார்பில், மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போடியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டம் திருச்சி நவலூர்குட்டப்பட்டில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், அதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அதிமுகபொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது:

தமிழகத்தை அதிமுக ஆட்சி குட்டிச்சுவராக்கிவிட்டதாக ஸ்டாலின் பேசுகிறார். உங்கள் குடும்பத்திடம் இருந்து தமிழகத்தை மீட்டுகாப்பாற்றியது எம்ஜிஆர், ஜெயலலிதாதான்.

அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. மதுரையில் எய்ம்ஸ் அறிவிப்பு வருவதற்கு அதிமுகதான் காரணம். ஆனால், அங்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை எனஉதயநிதி ஸ்டாலின் 3 ஆண்டுகளாக ஒரு செங்கல்லை காட்டிக் கொண்டிருக்கிறார். அந்த செங்கல்லை நாடாளுமன்றத்தில் காட்டியிருக்க வேண்டும். திமுக கூட்டணியின் 38 எம்பிக்களும் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அதற்கான துணிவு அவர்களிடம் இல்லை.

அதிமுக ஆட்சியில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மேகேதாட்டுவில் அணை கட்டுவது தடுக்கப்பட்டது. ஆனால், இப்போது மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு துடிக்கிறது.அதற்கு எதிராக முதல்வர் ஸ்டாலினும் வாய் திறக்கவில்லை. தமிழகத்துக்கும், விவசாயிகளுக்கும் துரோகம் இழைக்கும் ஸ்டாலினுக்கு வரும் மக்களவை தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும்.

2ஜி ஊழல் வழக்கு மீண்டும் தூசிதட்டப்பட்டுள்ளது. யார் யார் சிறைக்கு செல்வார்கள் என்று தெரியவில்லை. அதேபோல, இங்கு உள்ள அமைச்சர்களும் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க முடியாது.

திமுகவில் இருந்த ஜாபர் சாதிக், வெளிநாட்டுக்கு போதைப் பொருள் கடத்தி வந்துள்ளார். தமிழகம் போதைப் பொருள் மாநிலமாக மாற திமுகவும், அதன் நிர்வாகிகளும்தான் காரணம். கஞ்சா விற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட 2,038 பேரில் 148 பேர்தான் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் திமுகவினர் என்பதால் கைது செய்யப்படவில்லை. திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரேமலதா குற்றச்சாட்டு: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியபோது, ‘‘பெட்ரோல், டீசல், காஸ் விலையை குறைப்போம் என நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் அளிக்கிறார். தேர்தல் பத்திரம் மூலம் இந்திய அளவில் பாஜகவும், தமிழகத்தில் திமுகவும் அதிக நிதியை பெற்றுள்ளன’’ என்றார்.

கூட்டத்தில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக், அகில இந்திய பார்வர்டுபிளாக் பொதுச்செயலாளர் கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோயிலில் இபிஎஸ் வழிபாடு: முன்னதாக, நேற்று காலை சேலம் மாவட்டம் நங்கவள்ளி பெரிய சோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோயிலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சென்றார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்கு சிறப்பு வழிபாடுநடத்திய பிறகு தேர்தல் பிரச்சாரத்தை அவர் தொடங்கினார். அமைப்புச் செயலாளர் செம்மலை, சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் விக்னேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x