Published : 15 Feb 2018 06:51 AM
Last Updated : 15 Feb 2018 06:51 AM

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தேர்தலில் பழங்குடி பெண் தேர்வு

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளாட்சிப் பிரதிநிதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பழங்குடியினர் எனப்படுவோர், நாகரிக ஓட்டத்துக்கு ஏற்ப மாறாதவர்க வாழ்ந்து வருபவர்கள் ஆவர். ஆனால், ஒரு நாட்டின் பண்பாட்டையும், வரலாற்றையும் அறிந்து கொள்ள அந்த நாட்டின் பூர்வ குடிமக்களைப் பற்றிய புரிதல் அவசியமாகிறது.

உலகளவில் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, நியுசிலாந்து, ஜாவா, சுமத்திரா, போர்னியா போன்ற நாடுகளில் வாழ்ந்து வருவது போலவே, இலங்கையிலும் சிறுபான்மையினராக பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கையைப் பொறுத்தளவில் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் பழங்குடிகள் வேடர், ரொடியா, கின்னரயா ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். நாடோடிகளாக வாழும் பழங்குடிகளை இலங்கைத் தமிழர்கள் குறவர்கள் என்றும், சிங்களர்கள் அகிகுண்டகாயா என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர்.

இலங்கையில் வாழும் பழங்குடிகளின் மொழி வேடுவ பாஷை என அழைக்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் பழங்குடிகளின் வேடுவ பாஷையில் தமிழும், சிங்களவர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் பகுதியில் வாழும் பழங்குடிகளின் பாஷையில் சிங்களமும் கலந்திருக்கிறது.

இலங்கையில் ஊவா மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் தம்பன பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வேடர் சமுதாய பழங்குடி குடும்பங்கள் வசிக்கின்றனர்.

வேட்டையாடுவதில் இருந்து இவர்கள் தற்போது விவசாயத்துக்கு மாறி வருவதாகக் கூறப்படுகிறது. இலங்கையின் அதிபராக பிரேமதாச இருந்தபோது, இந்தப் பகுதி பழங்குடிகளுக்கு இலங்கையின் குடியுரிமையும் வழங்கப்பட்டது.

2002-ம் ஆண்டு இலங்கை கணக்கெடுப்பின்படி சுமார் மூன்று ஆயிரம் பழங்குடிகள் வாழ்ந்து வருவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தற்போது குறைந்தோ அல்லது கூடியோ இருந்தாலும், இலங்கையின் ஆக சிறுபான்மையின சமூகத்தினராக பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த பிப்.10-ம் தேதி நடைபெற்றது. இதில் அம்பாறை மாவட்டத்தில் தெகியத்தகண்டிய அருகே ஹேனானிகல வடக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பாக போட்டியிட்ட சிலோமலா(37) என்ற பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த பெண் 1,336 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதுகுறித்து, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தேர்தலில் மண்ணின் மைந்தர்களான பழங்குடிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வரும், இலங்கையின் பழங்குடிகளின் தலைவரான ஊறுவரிகே வன்னிலா எத்தோ கூறியதாவது:

எங்களது சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண் முதல் முறையாக உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் புதிய வரலாறு படைத்திருக்கிறார். இலங்கையில் பழங்குடிகள் பல நூறாண்டு காலமாக எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதற்கு இந்த வெற்றி முதல்படியாக அமையும் என்றார்.

வெற்றிபெற்ற வேட்பாளரான சிலோமலா கூறும்போது, ‘இலங்கையில் பழங்குடிகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதே எனது இலக்கு’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x