Published : 07 Aug 2014 10:14 AM
Last Updated : 07 Aug 2014 10:14 AM

பேரவையில் கடும் அமளி: தேமுதிகவினர் வெளியேற்றம்

முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் பேரவையில் இருந்து தேமுதிக உறுப்பினர்கள் வெளியேற்றப் பட்டனர்.

சட்டசபையில் புதன்கிழமை காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. விவாதத்தை தொடங்கி வைத்து தேமுதிக உறுப்பினர் சந்திரகுமார் பேசும்போது, அவருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் விவரம்:

சந்திரகுமார் (தேமுதிக):

காவல் துறையினருக்கு 8 மணி நேர வேலையை அமல்படுத்த வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா:

காவல்பணி என்பது நேரம் வரையறுக்கப்பட்டு செய்யும் பணி அல்ல. ரோந்துப் பணி, சட்டம், ஒழுங்கு, நீதிமன்றப் பணி மற்றும் முக்கிய நபர்களின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுபவர்கள் சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர். காவலர்களின் பணிச் சுமையைக் கருத்தில் கொண்டு ஓய்வு வழங்கப்படுகிறது. மேலும், கூடுதல் நேர ஊதியம், உணவுப்படி போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன. காவலர்களின் பணிச் சுமையைக் குறைக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

சந்திரகுமார்:

தமிழகத்தில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 9 இடங்களில் செயின் பறிப்பு நடந்துள்ளது. சட்டம், ஒழுங்கும் சீர்குலைந்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா:

குற்ற நிகழ்வுகள், செயின் பறிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றியெல்லாம் பேசுவதற்கு அடிப்படைத் தகுதி வேண்டும். தற்போது சட்டம், ஒழுங்கு பற்றி பேசும் உறுப்பினர், அவ்வாறு செயல்பட்டுள்ளாரா என்பதை அவரே எண்ணிப் பார்க்க வேண்டும். இதைப் பற்றி பேசுவதற்கு தேமுதிக உறுப்பினர்களுக்கு அருகதை இருக்கிறதா என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதை ஆதாரத்துடன் சொல்கிறேன். (இவ்வாறு கூறிய முதல்வர், தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழங்குகளின் பட்டியலை வாசித்தார்)

இந்த அவையிலும், அவைக்கு வெளியேயும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளிலும், குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வரும் தேமுதிகவினர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு சட்டம் ஒழுங்கு பற்றி இங்கே பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. முதலில் அவைக்கு உள்ளேயும், வெளியேயும் சட்டம் ஒழுங்கை காப்போம் என்று உறுதிமொழியை அளித்துவிட்டு அதன்பிறகு காவல்துறை மானியக் கோரிக்கை மீது பேசலாம்.

(முதல்வரின் பேச்சுக்கு தேமுதிக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு விளக்கம் அளிக்க அனுமதி கோரினர்)

பேரவைத் தலைவர்:

உறுப்பினர் 55 நிமிடம் பேசிவிட்டார். இனி மேலும் பேச அனுமதிக்க முடியாது. (தேமுதிக உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷமிட்டுக் கொண்டே இருந்தனர்)

பேரவைத் தலைவர்:

இதற்கு மேல் நேரம் இல்லை. ஒரு மணி நேரத்துக்கு மேல் எப்படி அனுமதிக்க முடியும். நீங்கள் பேசுவது எதுவும் அவைக் குறைப்பில் பதிவாகாது.

அதன்பிறகும் தேமுதிக உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டுக் கொண்டே இருந்ததால் அவையில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே, அதிமுக சார்பில் பேச பொள்ளாச்சி ஜெயராமனை பேரவைத் தலைவர் அழைத்தார். தேமுதிக உறுப்பினர்களின் கோஷத்தால், பொள்ளாச்சி ஜெயராமன் என்ன பேசுகிறார் என்று கேட்க முடியவில்லை.

அப்போது அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து பேச முயன்றார். ஆனால், தேமுதிக உறுப்பினர்கள் இருக்கையில் அமராமல் கோஷமிட்டபடியே அமளியில் ஈடுபட்டதால், அவர் பேச முடியாமல் அமர்ந்துவிட்டார். அதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் எழுந்து நின்று, தேமுதிக உறுப்பினர்களை இருக்கையில் அமருமாறு கூறினார். அவர்களும் அமர்ந்தனர். பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்ததும், மீண்டும் தேமுதிக உறுப்பினர்கள் எழுந்து நின்று பேசிக் கொண்டே இருந்தனர். இப்படியே நான்கு தடவை நடந்தது.

பேரவைத் தலைவர்:

ஒரு மணி நேரம் பேச அனுமதித்து விட்டேன். இனிமேல் பேச அனுமதிக்கவே முடியாது. இப்படி தொடர்ந்து நடந்து கொண்டால் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.

பேரவைத் தலைவர் எச்சரித்த பிறகும் தேமுதிக உறுப்பினர்கள் அமரவில்லை. இதையடுத்து, ‘வேண்டுமென்றே திட்டமிட்டு அவையை நடத்தவிடாமல் குந்தகம் விளைவிக்கும் தேமுதிக உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும்’ என அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். அவைக் காவலர்கள் வந்து, தேமுதிக உறுப்பினர்களை வெளியேற்றினர். இந்த அமளியால் பேரவையில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x